அதிரடியில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. சட்டசபையில் ஆளுநர் ரவிக்கு எதிரான தனித்தீர்மானம் வெற்றி!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.
சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் குறித்து பொதுவெளியில் ஆளுநர் தெரிவிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்புடையதாக இல்லை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேசிய உரைக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதோடு சட்டசபையிலேயே அவரின் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. இன்னொரு பக்கம் ஆளுநரின் செயல்பாடுகள் மீது ஆளும் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார். முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். சில மசோதாக்கள் 1 வருடமாக கிடப்பில் இருக்கின்றன. இதனால் ஆளுநருக்கும் - ஆளும் தரப்பிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுபோக மத ரீதியாக ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வருகிறார். மத ரீதியாக கடுமையான கருத்துக்களை அவர் பேசி வருகிறார். ஆளுநர் என்பவர் நடுநிலையாக செயல்பட வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக அதை பின்பற்றி செயல்பட வேண்டும். அப்படி இருக்கும் போது அவர் சனாதனம் பற்றி பேச கூடாது. அதேபோல் இந்தியா இந்து நாடு என்று பேச கூடாது. மதம் பற்றி அவர் கருத்து தெரிவிக்கவே கூடாது. பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் போல அவர் செயல்பட கூடாது என்பதுதான் திமுகவினர் ஆளுநருக்கு எதிராக வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.
இந்த நிலையில் சமீபத்தில் குடிமைப்பணி பயிற்சி பெற்றவர்கள் முன்னிலையில் பேசிய ஆளுநர் ஆர். என் ரவி, சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். கிடப்பில் கிடந்தால் அந்த சட்டம் இறந்துவிட்டதாகவே பொருள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் தாக்கல் செய்து அதை நிறைவேற்றினார். சட்டசபையில் இன்று காலை தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். சட்டசபை மாண்புகளை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார் . சட்டசபை மசோதாக்களை டெல்லிக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்தல், ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு இந்த தீர்மானம் வெற்றிபெற்றது. 144 உறுப்பினர்களிடம் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
முக்கியமாக ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று வெற்றிபெற்ற தனி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானத்தை கொண்டுவந்தார் அவை முன்னவர் துரைமுருகன். அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்காக பேரவை கதவுகள் அடைக்கப்பட்டன.
வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய சபாநாயகர் அப்பாவுவிடம் பாஜக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை,

என்ன பேசினார்? : தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் தாக்கல் செய்த பின் பேசிய அவர், ஆளுநர் என்பதை மறந்துவிட்டு அரசியல்வாதியாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. விதண்டவாதமாக பேசி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழ்நாட்டு மக்களின் நண்பராக செயல்பட மறுக்கிறார் ஆளுநர் ரவி. ஆளுநர் பொதுவெளியில் அரசு நடவடிக்கைகளை விமர்சிக்கிறார். பிரதமரிடம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர் ரவி. ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல.

தமிழ்நாடு சட்டசபையை அவமதித்து வருகிறார் ஆளுநர் ரவி. ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றிக் கொண்டு வருகிறார் ஆளுநர் ரவி. ஆளுநரின் செயல்பாடுகளை கை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். அரசியல்வாதி போல் செயல்படுகிறார் ஆளுநர். பிரதமர் தமிழ்நாடு வரும் போதோ அல்லது பிரதமரை சந்திக்க நான் டெல்லி செல்லும் போதோ, தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, அவரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம். சட்டமன்றத்திற்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனை கை கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம். அரசியல் சட்டம் ஆளுநருக்கு தெரியவில்லை என்று கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய "அரசியல் சட்ட விசுவாசத்தை", "அரசியல் விசுவாசம்" அப்படியே விழுங்கி விட்டது என்றே அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நண்பராக இருப்பதற்கு தயாராக இல்லை என்று, பதவியேற்ற நாளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி செய்யும் செயல்கள் வெளிப்படுத்தி வருகிறது. அரசியல் சட்டத்தின் தந்தை அம்பேத்கர், ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாதவராக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications