தெலுங்கானா முதல்வராகும் ரேவந்த் ரெட்டிக்கு தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக இன்று பதவியேற்கும் காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டிக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
119 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ந் தேதி தேர்தல் நடைபெற்றன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64, பிஆர்எஸ் கட்சி 39, பாஜக 8, ஓவையின் மஜ்லிஸ் கட்சி 7, சிபிஐ 1 இடத்தில் வென்றன. தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க தேவை 61 இடங்கள். பெரும்பான்மை பலத்துடன் வென்ற காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

தெலுங்கானா தேர்தலின் போதே முதல்வர் வேட்பாளராக ரேவந்த் ரெட்டி முன்னிறுத்தப்பட்டார். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்ற நிலையில் முதல்வர் பதவிக்கான போட்டியும் தொடங்கியது. டெல்லி மேலிடம் தலையிட்டு ரேவந்த் ரெட்டிதான் முதல்வர் என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரேவந்த் ரெட்டி இன்று தெலுங்கானா முதல்வராக பதவி ஏற்கிறார்.
பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவி, பிஆர்எஸ் கட்சி, தெலுங்குதேசம் கட்சிகளில் பயணித்து எம்.எல்.ஏ.வானவர் ரேவந்த் ரெட்டி. 6 ஆண்டுகளுக்கு முன்னர் 2017-ல் காங்கிரஸில் இணைந்தார். தற்போது தெலுங்கானா மாநில முதல்வராகிறார் ரேவந்த் ரெட்டி.
During our phone conversation, I extended my warmest congratulations and best wishes to Thiru. @revanth_anumula, as he prepares to be sworn in as the Chief Minister of Telangana.
— M.K.Stalin (@mkstalin) December 7, 2023
Wishing him a successful and impactful tenure.@INCTelangana
தற்போதைய தேர்தலில் கோடங்கல், கம்மாரெட்டி (கமரெட்டி) ஆகிய 2 தொகுதிகளில் ரேவந்த் ரெட்டி போட்டியிட்டார். கோடங்கல் தொகுதியில் 32,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ரேவந்த் ரெட்டி. ஆனால் கமரெட்டி தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
ரேவந்த் ரெட்டி பதவியேற்பு விழாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனிடையே தெலுங்கானா முதல்வராகும் ரேவந்த் ரெட்டிக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications