"கர்மயோகி".. பிரதமர் மோடியிடம் நேரில் துக்கம் விசாரிக்க.. இன்று டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். காலை 7 மணி விமானத்தில் தலைநகர் செல்கிறார் முதல்வர்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி காலாமானார்.. இந்த தகவலை பிரதமர் நரேந்திரமோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.
அதில் "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா... ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள். மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது" என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

மதர் - சோகம்
பிரதமரின் தாயார் இறந்த செய்தி நேற்று காலை 6 மணிக்கு வெளியானது. குஜராத்தில் உள்ள காந்திநகருக்குச் சென்ற பிரதமர் மோடி காலை 9:30 மணியளவில் தாயாருக்கு இறுதிச்சடங்குகளை செய்தார். அதனைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி காலை 11 மணிக்கு பணிக்குத் திரும்பினார்.. பிரதமர் மோடியின் தாயாரின் இறுதிச் சடங்குகள் முடிந்த ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, பிரதமர் மோடி ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை காணொலி மூலமாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆச்சரியம்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினார். ஆனாலும் பிரதமர் மேற்கு வங்க நிகழ்ச்சிகளில் காணொலி மூலமாக கலந்துக்கொண்டார். மேலும் மேற்கு வங்கத்தில் ரூ.7,800 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களையும் தொடங்கிவைத்தார். இது பல்வேறு தலைவர்களுக்கும் ஆச்சரியத்தை அளித்திருந்தது..

ஸ்டாலின் இரங்கல்
தனது தாயை இழந்த நாளிலேயே தனது உத்தியோகபூர்வ பணிகளைத் தொடர்ந்த பிரதமரின் முடிவு சக அமைச்சர்கள் மற்றும் பிற பாஜக தலைவர்களிடமிருந்து பாராட்டையும் பெற்றது. அவர்கள் பிரதமரை ஒரு "கர்மயோகி" என்று பாராட்டினர்... முன்னதாக, மோடியின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலையும் வருத்தத்தையும் பதிவிட்டனர்.. அந்தவகையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்திருந்தார்.. பிரதமர் மோடியின் தாயார் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன் என்றும், தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது என்று பதிவிட்டிருந்தார்.

திடீர் சேஞ்ச்
இந்நிலையில், பிரதமரின் தாயார் ஹீராபென் மறைவுக்கு நேரடியாகவே, இரங்கல் தெரிவிக்க முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். இன்று காலை 7 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.. தமிழ்நாடு இல்லம் சென்று தங்கும் அவர் பிரதமரிடம் நேரில் துக்கம் விசாரிக்கிறார்.. எனினும், ஸ்டாலின் நேற்று மாலையே டெல்லி செல்வதாக இருந்தது.. ஆனால் பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து டெல்லி திரும்ப தாமதம் ஏற்பட்டதன் காரணமாக இந்த பயண திட்டம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications