அப்பல்லோவில் 4ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை! எப்படி இருக்கிறார்?
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று நான்காவது நாளாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்டாலின் லுங்கி அணிந்து கொண்டு முதல்வர் அலுவலகப் பணிகளைக் கவனிக்கும் புகைப்படம் வெளியாகி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எப்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் முதல்வரான பிறகும், வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போதும் சரி, நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை ஒருபோதும் கைவிட்டதில்லை. நாள்தோறும் இவற்றை அவர் செய்து வருகிறார். அவரது உடல்நலம் சீராகச் செயல்பட இதுவும் ஒரு காரணம். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென லேசான தலைச்சுற்றலை உணர்ந்துள்ளார்.

இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் திமுகவுக்கு வந்த அன்வர் ராஜாவுக்கு வரவேற்பு அளித்த முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து கொளத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவுக்குச் செல்லாமல், நேரடியாகக் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது வழக்கமான உடல் பரிசோதனை என்று கூறப்பட்டாலும், பின்னர் தலைச்சுற்றல் காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது.
முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை சபரீசன் ஆகியோர் மருத்துவமனையில் உடன் உள்ளனர்.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அவர் மருத்துவமனையில் இருந்தவாறே தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று மூன்றாவது நாளாகச் சிகிச்சை பெற்று வந்த ஸ்டாலின், மருத்துவமனையில் இருந்தபடியே கோப்புகளில் கையெழுத்திடும் பணிகளைக் கவனித்துக்கொண்டார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது: "மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா? நேற்று வரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை? தீர்வு காணப்பட்டவை எத்தனை? உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தி உள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் லுங்கி அணிந்து கொண்டு தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய புகைப்படங்கள் வெளியாகின. அதுபோல், அவர் அங்கிருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின்' குறித்த கோப்புகளைப் பார்வையிட்டிருந்தார். மேலும், காணொளி மூலம் பொதுமக்களுடன் உரையாடிய அவர், தான் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் திமுகவின் உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications