சிறுமியை சீரழித்த பக்கிரிசாமி..பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும்..இபிஎஸ் கேள்விக்கு முதல்வர் பதில்
சென்னை: பள்ளியில் படித்து வரும் 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பக்கிரிசாமி கட்சியை விட்டு நிரந்தரமாக நீக்கப்பட்டு விட்டதாகவும், அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றமிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவர் சக்தி நகரில் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். மேலும் விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். பக்கிரிசாமி தனது பள்ளியில் படித்து வரும் 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பக்கிரிசாமியை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட பக்கிரிசாமி திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டு உள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பக்கிரிசாமி செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார்.

6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த தகவலை நான் டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூற மாட்டேன். தகவல் அறிந்த உடன் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரிக்க உத்தரவிட்டேன்.
பள்ளி சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பக்கிரிசாமி திமுக கவுன்சிலராக இருந்தவர். அவரை உடனடியாக கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் பக்கிரிசாமி. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். சிறுமிகள், பெண்களுக்கு எதிராக தவறு செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications