திடீர் உடல்நலக்குறைவு.. முதல்வர் ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி.. என்னாச்சி?
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாளுக்கு இன்று மாலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் விரைந்து சென்று அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த நிலையில் தயாளு அம்மாளுக்கு என்ன பிரச்சனை என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தயா் தயாளு அம்மாள். இவர் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக தயாளு அம்மாள் முழு ஓய்வில் உள்ளார். தயாளு அம்மாளுக்கு தற்போது 90 வயது ஆகிறது.

கடந்த 12 நாட்களுக்கு முன்பு தான் தயாளு அம்மாள் தனது பிறந்தநாளை கோபாலபுரம் இல்லத்தில் கொண்டாடினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அவரது அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி உள்பட குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர்.
முதல்வர் ஸ்டாலின், முக அழகிரி ஆகியோர் இடையே மனக்கசப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் தங்களின் தயாரின் பிறந்தநாள் விழாவில் ஒன்று கூடினர். மேலும் இருவரும் நீண்டநேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் முதல்வர் ஸ்டாலின், முக அழகிரி ஆகியோர் தங்களின் தாயாரான தயாளு அம்மாள் மீது அதிக பாசம் வைத்துள்ளனர்.
இருவரும் தனித்தனியாக வசித்து வந்தாலும் கூட அவ்வப்போது கோபாலபுரம் வந்து தாய் தயாளு அம்மாவிடம் நலம் விசாரித்து கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோபாலபுரம் சென்று தாய் தயாளு அம்மாளை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தான் இன்று முதல்வர் ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடந்த முத்தமிழ் பேரவை 42ம் ஆண்டு இசை விழாவில் பங்கேற்று இருந்தார். இதையடுத்து தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டது பற்றிய தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார்.
மருத்துவமனை டாக்டர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தாய் தயாளு அம்மாளின் பாதிப்பு மற்றும் அவரது சிகிச்சை முறைகள் பற்றி கேட்டறிந்தார். அப்போது உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications