ஆபரேஷன் "டெல்லி".. கவனத்தை திருப்பும் திமுக.. நிர்வாகிகளிடம் லிஸ்ட் கேட்ட டிஆர்பி.. ஸ்டாலின் பிளான்?
சென்னை: தேசிய அளவில் கவனம் செலுத்தும் விதமாக திமுக தரப்பில் இருந்து முக்கியமான அறிவிப்பு ஒன்று நிர்வாகிகளுக்கு சென்றுள்ளது.
ஆளும் திமுக அரசு தற்போது தமிழ்நாட்டில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கடந்த சில மாதங்களாக கவனம் செலுத்தி வருகிறது. பாஜகவிற்கு எதிராக ஒரு சில கட்சிகள்தான் கடுமையாக குரல் எழுப்பி வருகின்றன. அதில் திமுக முக்கியமான கட்சியாக பார்க்கப்படுகிறது.

முக்கியமாக பாஜகவின் திட்டங்களை தேசிய அளவில் முதல் ஆளாக எதிர்க்கும் கட்சியாக திமுக பார்க்கப்படுகிறது. நீட் விவகாரம். இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவை திமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.
பாராளுமன்றத்திலும் திமுகதான் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. இந்த நிலையில்தான் தேசிய அளவில் திமுக தன்னை பெரிய கட்சியாக முன்னிறுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. தேசிய அளவில் எதிர்கட்சிக்கான வெற்றிடம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், அந்த இடத்தை பிடிப்பதற்காக வலிமையான மாநில தலைவர்கள் சிலர் முயன்று வருகின்றனர். முக்கியமாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தேசிய அளவில் பெரிய கட்சியாக உருவெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னொரு பக்கம் ஆம் ஆத்மி கட்சியும் தேசிய அளவில் பெரிய கட்சியாக வலிமைபெறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஏற்கனவே அந்த கட்சி டெல்லி, ஹரியானாவில் ஆட்சியை பிடித்துவிட்டது. குஜராத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் ஆம் ஆத்மி முயன்று வருகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்க ஆம் ஆத்மி முயற்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் திமுகவும் டெல்லி அரசியலில் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இருக்கிறது. தேசிய அரசியலில் அவரை பலர் பாராட்ட தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் திட்டங்கள் பல தேசிய அளவில் கவனம்பெற்றுள்ளன .
இந்த நிலையில்தான் தேசிய அளவில் கவனம் செலுத்தும் விதமாக திமுக தரப்பில் இருந்து முக்கியமான அறிவிப்பு ஒன்று நிர்வாகிகளுக்கு சென்றுள்ளது. அதன்படிதான் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் திமுகவின் ஐடி விங்கை வலுப்படுத்த திமுக முடிவு செய்துள்ளது. இந்திய அளவில் இதற்காக ஐடி விங் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுக்க கொண்டு செல்லும் விதமாக இந்த நியமனம் நடக்க உள்ளது. இதற்காக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகவல் தொழில்நுட்பஅணியின் செயல்பாட்டினை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது என்று திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார்.

வெவ்வேறு மாநிலங்களில் நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், துணை செயலாளர்களை நியமிக்க திமுக முடிவு செய்துள்ளது. அந்தந்த மாநில தலைமை நிர்வாகிகள் இதற்கான லிஸ்டை அனுப்ப வேண்டும் என்று டிஆர்பி ராஜா அறிக்கை அனுப்பி இருக்கிறார். இந்த லிஸ்ட் கிடைத்த பின் அதற்கான நியமனங்கள் செய்யப்படும்.
இதை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் திமுக சார்பாக ஐடி விங் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.












Click it and Unblock the Notifications