தெற்கில் தேர்தல், தகிக்கும் மபி.! எல். முருகனை வைத்து பாஜக போடும் மெகா பிளான்! சிக்கலில் காங்கிரஸ்?
போபால்: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், சுமார் 2,000 கி.மீ தள்ளி இருக்கும் மத்தியப் பிரதேச அரசியலில் ஒரு பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. மத்திய அமைச்சர்கள் எல். முருகன் மற்றும் ஜார்ஜ் குரியன் ஆகியோர் முறையே தமிழ்நாடு மற்றும் கேரள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் சூழலில், இது மபி மாநிலத்தில் ராஜ்யசபா கணக்குகளை மாற்றும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இப்போது சட்டசபைத் தேர்தல்கள் நடப்பது அனைவருக்கும் தெரியும். இதில் கேரளாவில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் அடுத்த வாரம் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு, கேரளாவைத் தாண்டி மத்தியப் பிரதேச அரசியலிலும் எதிரொலிக்க உள்ளது.

மத்திய பிரதேசம்
அதாவது மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களான எல். முருகன் (தமிழ்நாடு) மற்றும் ஜார்ஜ் குரியன் (கேரளா) ஆகியோர் இப்போது அந்தந்த மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கிறார்கள். அதில் எல் முருகன் அவினாசி தொகுதியில் போட்டியிடுகிறார். ஜார்ஜ் குரியன் கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் களமிறங்குகிறார். இந்த தேர்தலில் இருவரும் வென்றால் அது மபி ராஜ்யசபா தேர்தலை மொத்தமாகப் புரட்டிப் போடும்.
இந்த மாதம் ம.பி மாநிலத்தில் திக்விஜய சிங் (காங்கிரஸ்), சுமேர் சிங் சோலங்கி (பாஜக) மற்றும் ஜார்ஜ் குரியன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைவதால் 3 இடங்கள் காலியாகின்றன. ஒருவேளை எல். முருகன் தமிழ்நாட்டில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிவிட்டால், மத்தியப் பிரதேசத்தின் மற்றொரு ராஜ்யசபா இடமும் காலியாகும். அதாவது, மொத்தம் 4 இடங்களுக்குப் போட்டி வரலாம்!
ராஜ்யசபா
ராஜ்யசபா தேர்தல் கணக்கு என்பது கொஞ்சம் சிக்கலானது. மத்தியப் பிரதேசத்தின் 230 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு கணக்கிட்டால்.. வழக்கம் போல 3 இடங்கள் காலியானால் ஒரு இடத்திற்கு 58 வாக்குகள் தேவை. இப்போது அங்கு பாஜகவுக்கு 160க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜக மிக எளிதாக 2 இடங்களை வென்றுவிடும். மீதமுள்ள வாக்குகளை வைத்து காங்கிரஸுக்கு செக் வைக்கவும் அவர்கள் ரெடி! அதேநேரம் 4 இடங்கள் காலியானால் ஒரு இடத்திற்கு 47 வாக்குகள் போதும். அப்போது நிலைமை இன்னும் சிக்கலாக மாறும்.
காங்கிரஸ்
மறுபுறம் காங்கிரஸுக்கு 65 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர்.. இரு எம்எல்ஏக்களான ராஜேந்திர பாரதி, முகேஷ் மல்ஹோத்ரா ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும், நிர்மலா சப்ரே பாஜகவுக்குத் தாவியதாலும், காங்கிரஸின் பலம் இப்போது 62ஆக மட்டுமே உள்ளது.. 58 வாக்குகள் தேவைப்படும் இடத்தில், காங்கிரஸ் கைவசம் இருப்பது 62 தான். வெறும் 4 பேர் கட்சி மாறி வாக்களித்தாலும் காங்கிரஸின் ஒரு சீட் கனவும் காலி!
மேலும், எல். முருகன் மற்றும் ஜார்ஜ் குரியன் மாநில அரசியலுக்குச் சென்றால், மத்திய அமைச்சரவையிலும் காலியிடங்கள் உருவாகும். இதைக் குறிவைத்து மத்தியப் பிரதேச பாஜகவின் ஹர்ஷ் சவுகான், ரஞ்சனா பாகேல் போன்ற பெயர்கள் இப்போதே டெல்லியில் வட்டமடிக்கத் தொடங்கிவிட்டன.
என்ன நடக்கும்!
காங்கிரஸைப் பொறுத்தவரை மூத்த தலைவர் திக்விஜய சிங் இந்த முறை போட்டியிடப் போவதில்லை என ஒதுங்கிக்கொண்டார். இதனால் காங்கிரஸ் சீட்டுக்கு இப்போதே கடும் போட்டி இருக்கிறது. தலித், பிராமண மற்றும் சிந்தி சமூகப் பிரதிநிதித்துவத்தைக் கேட்டுப் பல முனைகளிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அங்குள்ள சிறு கட்சிகளும் தானும் ஒரு வேட்பாளரை நிறுத்தப்போவதாகக் கூறி மிரட்டிக்கொண்டிருக்கிறார். இதனால் அங்கு ஒரு இடியாப்ப சிக்கலே நிலவுகிறது.
தெற்கில் வீசும் தேர்தல் காற்று, மத்திய பிரதேசத்தில் இருக்கிற ராஜ்யசபா கோட்டையை ஆட்டிப் பார்க்கிறது.. எல். முருகன் மற்றும் குரியனோட வெற்றி மபி அரசியலில் ஒரு புயலை கிளப்பி வைக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications