6 மணிக்கு மேல் கப் - சிப்.. வெளியூர் ஆட்கள் இருக்க கூடாது.. இன்று மாலை முதல் அமலுக்கு வரும் விதிகள்!
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிகள் மற்றும் Silence Period அமலுக்கு வருகின்றன.

பரப்புரை ஓய்வு: வெளிமாவட்ட நபர்களுக்கு வெளியேற உத்தரவு
இன்று மாலை 6 மணிக்குப் பிறகு எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் அல்லது மைக் செட் மூலம் பிரசாரம் செய்ய அனுமதி கிடையாது. குறிப்பாக, அந்தந்த தொகுதிகளின் வாக்காளர்கள் அல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், வெளியூர் ஆட்கள் மற்றும் தொண்டர்கள் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதைக் கண்காணிக்க திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடிச் சோதனைகளை மேற்கொள்வார்கள். விதிமீறலில் ஈடுபடுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளக் கட்டுப்பாடுகள்
வாக்குப்பதிவு முடிவடைவதற்கு முன்னதான இந்த 48 மணி நேரத்தில், தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதளங்கள் அல்லது இணையதளங்கள் மூலம் தேர்தல் தொடர்பான எந்த ஒரு கருத்தையும் பரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்புகள்: தேர்தலுக்கு முந்தைய / பிந்தைய வாக்குக்கணிப்பு (Survey / Poll) அல்லது எந்தவிதமான கருத்துக் கணிப்பு முடிவுகளையும் வெளியிடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகள் ஏப்ரல் 23ம் தேதி மாலை 6 மணி வரை தொடரும்.
விளம்பரங்கள்: அரசியல் கட்சிகள் தங்களின் சாதனைகளை விளக்கும் புதிய விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட அனுமதி இல்லை. முன் அனுமதி பெற்ற விளம்பரங்களுக்கு மட்டுமே சில நிபந்தனைகள் உண்டு.
தொழில்நுட்பம்: செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்கள் அல்லது ஆடியோக்களைப் பரப்புவோர் மீது கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகனக் கட்டுப்பாடுகள் மற்றும் மதுக்கடைகள் மூடல்
வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகின்றன. தேர்தல் நாளன்று வேட்பாளர் தனது சொந்த பயன்பாட்டிற்கு ஒரு வாகனம் மற்றும் தேர்தல் முகவருக்கு ஒரு வாகனம் என குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவது சட்டப்படி குற்றமாகும்.
மேலும், தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இன்று மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். எவ்வித மது விற்பனையும் சட்டவிரோதமாக நடைபெறாமல் இருக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
வாக்குச்சாவடி விதிகள்
வாக்குச்சாவடிகளுக்கு 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் மட்டுமே அரசியல் கட்சிகள் தற்காலிக முகாம்களை அமைக்க வேண்டும். அங்கு இரண்டு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், ஏப்ரல் 23 காலை 7 மணி முதல் மாலை வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்று மாலை பிரசாரம் ஓய்ந்த பின், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் இருப்பதால், அரசியல் கட்சியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜனநாயகத் திருவிழாவின் முக்கிய கட்டமான வாக்குப்பதிவிற்கு மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications