உறுதியாக என்னுடன் இருப்பீர்களா? கலங்கிய விஜய்.. அண்ணே உங்களை விட்டு போவோமா? எமோஷன் ஆன வேட்பாளர்கள்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் அனைவரையும் அழைத்து பனையூரில் ஆலோசித்துள்ளார் விஜய். இதில், தேர்தல் ரிசல்ட்டிற்கு பிறகு என்னென்ன குதிரை பேரங்கள் நடக்கும் என விஜய்யிடம் விவரிக்கப்பட்டதோ, அதனை வேட்பாளர்களிடம் மனம் திறந்து பேசினாராம் விஜய்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முகாமில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

ஒரு சில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) தவெக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்று கணித்துள்ள நிலையில், தங்கள் கட்சி வேட்பாளர்களைப் பாதுகாப்பதில் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் வாக்கு எண்ணிக்கைக்குப் பிந்தைய கட்சித் தாவல்கள் புதியதல்ல. ஆனால், முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றியை எதிர்பார்க்கும் தவெக-வுக்கு, மற்ற பெரிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை இழுத்துவிடுவார்களோ என்ற அச்சம் (Fear of Poaching) எழுந்துள்ளது. ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிலிருந்தும் தங்கள் வேட்பாளர்களுக்கு நெருக்கடி வரலாம் என தவெக தலைமை கருதுகிறது.
விஜய் ஆலோசனை
இந்த நிலையில்தான் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் அனைவரையும் அழைத்து பனையூரில் ஆலோசித்துள்ளார் விஜய். இதில், தேர்தல் ரிசல்ட்டிற்கு பிறகு என்னென்ன குதிரை பேரங்கள் நடக்கும் என விஜய்யிடம் விவரிக்கப்பட்டதோ, அதனை வேட்பாளர்களிடம் மனம் திறந்து பேசினாராம் விஜய்.
குறிப்பாக, நாம் தாம் ஆட்சி அமைக்கிறோம். இல்லையெனில் நம் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அப்படிங்கிற சூழல்தான் உருவாகும். எந்த கோணத்தில் ஆராய்ந்து பார்த்தாலும் தவெகதான் டிசைடிங் ஃபேக்டர்.
அதற்கு காரணம், நீங்கள் அடைய போகிற வெற்றி. நீங்கள் எல்லாம் ஜெயித்தப்பிறகும் என்னுடன் இருப்பீர்களா? என்று அழுத்தமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் விஜய். அவர், அப்படி கேட்டத்தில் வேட்பாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி. என்ன தளபதி கேட்கிறீங்க? என்று பலரும் பதறியபடி கேட்டுள்ளனர்.
அதற்கு விஜய், ஒரு வேளை நாம் ஆட்சி அமைக்கிற அளவுக்கு சீட் நமக்கு கிடைக்காது போனால், திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது. நம்முடைய ஆதரவு அப்போது அவர்களுக்குத் தேவையாக இருக்கும்.
அதிமுக-பாஜக இரு கட்சிகளும் நமது ஆதரவை கேட்க முயற்சிப்பார்கள். அப்படி ஒரு நிலை வந்தால், அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று வேறு ஒரு வியூகம் நம்மிடம் இருக்கிறது. அதனை அப்போதைக்கு சொல்கிறோம்.
அதேபோல, திமுகவுக்கு நமது ஆதரவு தேவை என வருகிறபோது, நம்மிடம் ஆதரவு கேட்க ஸ்டாலின் முயற்சிக்க மாட்டார். மாறாக, நமது வேட்பாளர்களிடம் குதிரை பேரம் நடத்தி திமுகவுக்கு ஆதரவான நிலையை எடுக்க வைப்பர். அந்த குதிரை பேரத்தில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல், மயங்கி விடாமல்... அப்போதும் உறுதியாக என்னுடன் இருப்பீர்களா? என்பது தான் கேள்வி. அதைத்தான் உங்களிடம் கேட்கிறேன் என்று விவரித்துள்ளார் விஜய்.
அதைக்கேட்டு பலரும் பதறிவிட்டனர். வேட்பாளர்கள் சிலருக்கு பேசும் வாய்ப்புத் தரப்பட்ட போது, நாங்கள் வெற்றிப் பெற்றால் அதற்கு முழு காரணமும் நீங்கள் தான். மக்களுக்கு என்னையும் தெரியாது ; எனது பேரும் தெரியாது. ஆனாலும், என்னை ஜெயிக்க வைக்கிறார்கள் என்றால் அதற்கு முழு காரணமும் நீங்கள் தான். உங்களுக்காகத்தான் என்னை ஜெயிக்க வைத்திருப்பதாகத்தான் நான் நினைப்பேன்.
இங்குள்ள ஒவ்வொருத்தரும் அப்படித்தான் நினைப்பார்கள். அப்படியிருக்கும் போது, நாங்கள் எப்படி உங்களுக்குத் துரோகம் செய்வோம். அப்படி துரோகம் செய்து விட்டு எங்களால் தொகுதிக்குள் போக முடியுமா? அதனால், திமுகவின் குதிரை பேரங்களுக்கு எந்த சூழலிலும் மயங்க மாட்டோம். நீங்கள் கவலைப்படாதீர்கள் தளபதி. நீங்கள் வருத்தப்பட்டால் எங்களாம் ஜீரணித்துக்கொள்ள முடியாது என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளனர். அந்த பேச்சுகள், விஜய்க்கு ஆறுதலாக இருந்துள்ளது என்கிறார்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட வேட்பாளர்கள் சிலர்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications