சர்ப்ரைஸ் தரும் மின்சார வாரியம்.. கோடையிலும் ஜில் நியூஸ்.. தமிழக மக்களுக்கு இனிமேல் மகிழ்ச்சி
சென்னை: மின்சார வாரியம், அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது. தமிழக மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையினால், தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட வாய்ப்பில்லை என்றே நம்பப்படுகிறது.
நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை, மின்தேவை அதிகமாகவே இருந்து வருகிறது.. கடந்த ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்டதால், கோடையில் எப்படியும் 20,000 மெகாவாட்டை தாண்டும் என்று கணிக்கப்பட்டது.

பற்றாக்குறை: அதுமட்டுமல்ல, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரமும், மத்திய மற்றும் தனியார் நிறுவன மின்சாரமும் தமிழகத்துக்கு போதுமானதாக இல்லை..
அதனால்தான், 3,571 மெகா வாட் மின்சாரம் வாங்குவதற்கு மின் வாரியம் சமீபத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது.. இதுஒரு குறுகிய கால ஏற்பாடு என்றாலும், விரைவில் 4,321 மெகா வாட் வாங்கப்பட உள்ளதாகவும், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களிடம் இருந்து பெறப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
காற்றாலை சீசன்: இவைகளில் 600 மெகா வாட் பரிமாற்ற முறையிலான மின்சாரமும், மீதி மெகாவாட்கள் மின் கொள்முதல் என்றாலும், இந்த மின்சாரத்திற்கு பணம் எதுவும் தரப்போவதில்லையாம். அதற்கு பதிலாக, தமிழகத்தில் காற்றாலை சீசன் துவங்கியதுமே, பரிமாற்ற முறையில் வாங்கப்படும் மின்சாரம் அந்தந்த மாநிலங்களுக்கே திரும்ப வழங்கப்பட்டுவிடும் என்றும் தகவல்கள் கூறின.
இப்போது விஷயமென்னவென்றால், கோடை வெப்பத்தின்போது, மின் தேவையை சமாளிக்க, 3,286 மில்லியன் யூனிட் மின்சாரத்தை குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் தமிழக மின்சார வாரியம் கொள்முதல் செய்திருக்கிறதாம்.
மின் தேவைகள்: இதற்கு காரணம், கடந்த 2-ம் தேதி வரை, தமிழகத்தின் தினசரி மின்தேவை 20,830 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியிருந்தது.. ஆனாலும், இந்த மின்தேவையை மின்வாரியம் எளிதாக சமாளித்தது. மேலும், சொந்த தேவை, மத்திய தொகுப்புகளில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததுடன், தனியார் நிறுவனங்களிடமிருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.
இதன்படி, குறைந்தகால ஒப்பந்த அடிப்படையில் ரூ.7,755 கோடி மதிப்பில் 3,286 மில்லியன் யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.
அதிரடி நடவடிக்கை: சமீப நாட்களாகவே, தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் தினசரி மின்தேவை கணிசமாக குறைந்துள்ளது... எனினும், குறைந்தபட்ச மின் தேவையை சமாளிக்க காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications