தவெக ஆட்சி.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க! ஆக்சிஸ் மை இந்தியாவின் பிழை! கேள்விகளை அடுக்கும் ஜோதிமணி!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைவடைந்திருக்கும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிக்கும் என ஆக்சிஸ் மை இந்தியா கூறியிருப்பது ஆச்சரியமளித்திருக்கிறது. இந்நிலையில், இதனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் எம்பியான ஜோதிமணி. மேலும், அந்த கருத்து கணிப்பில் பல தவறுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த முறை சுமார் 85 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருப்பதால், யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஒரே குரலில் கூறுகின்றன. முக ஸ்டாலின் தலைமையிலான திமுக 120க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக தரப்பில் ஒரு நம்பிக்கை நிலை காணப்படுகிறது.
ஆனால், இதற்கு மாறாக ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக் கணிப்பு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. அந்த கணிப்பின்படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 98 முதல் 120 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. புதிய கட்சியாக களம் இறங்கிய தவெக குறித்து இப்படியான கணிப்பு வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாறுபட்ட கணிப்புகள் காரணமாக, "எது உண்மை?" என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, மற்ற நிறுவனங்கள் அனைத்தும் ஒரே மாதிரி கணித்துள்ள நிலையில், ஒரு நிறுவனம் மட்டும் முற்றிலும் மாறுபட்ட முடிவை கூறியிருப்பதோடு அரசியல் கட்சிகளையும், ஆய்வாளர்களையும் குழப்பமடைய வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜோதிமணி இந்த கருத்துக் கணிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தள பதிவில், இந்த கணிப்பில் பயன்படுத்தப்பட்ட தரவுகள் நம்பகத்தன்மையற்றதாக உள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லாததைப் போல் தெரிகிறது. அவர்களின் தரவுகளில், தேவர் 2%, வன்னியர் 7%, கவுண்டர் 4%, மற்றும் பிராமணர் 9% என எண்ணிக்கை கூறப்பட்டுள்ளது.
ஆனால், அவர்கள் சொல்லும் மக்கள்தொகையும் உண்மையான எண்ணிக்கையும் முரண்படுவதாகத் தெரிகிறது. எங்கிருந்து இந்தத் தரவுகளைப் பெற்றார்கள்? கணிப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், எந்தவொரு கருத்துக்கணிப்பிலும், சாம்பிள் எடுக்கப்படும் மக்களின் எண்ணிக்கை சதவீதங்கள் உண்மையான மக்கள்தொகை விகிதாச்சாரத்துடன் பொருந்த வேண்டும். தேவர்கள் 15% பிராமணர்கள் 1%க்கு மேல் இருக்கலாம். ஏன் மாதிரி அவர்கள் 2% & 9% என கூறியுள்ளனர். ஏன் இந்த குழப்பம்" என கூறியுள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பொதுவாக வாக்காளர்கள் வாக்களித்த பின்பு அவர்களிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், முன் கருத்துக் கணிப்புகளை விட அதிக துல்லியம் கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும், இந்த முறை பல்வேறு நிறுவனங்களின் கணிப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டுள்ளதால், எந்த முடிவையும் உறுதியாக சொல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications