இதான் “ஹைலைட்”.. மலக்குழி மரணத்துக்கு நோ! மனிதர்கள் கழிவு அள்ளுவதை ஒழிக்க பட்ஜெட்டில் புதிய திட்டம்
"தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி, நவீன இயந்திரங்கள் வாங்க வழிவகை செய்து, இத்திட்டம் தூய்மைப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதுடன், அவர்கள் வருவாய் ஈட்டிடவும் வழிவகுக்கும்."
சென்னை: மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது மனிதத்திற்கே களங்கம் என்று பட்ஜெட் உரையின்போது தெரிவித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதனை தடுப்பதற்கான சிறப்பு திட்டங்களை அறிவித்து உள்ளார்.
இந்தியாவில் எத்தனையோ கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும் மனித கழிவுகளை மனிதரே அல்லும் அவலம், அதனால் ஏற்படும் மலக்குழி மரணங்களை தடுக்க இதுவரை பெரிதாக நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தன.
இதன் காரணமாக தூய்மை பணி செய்யும் தொழிலாளர்கள் நாடு முழுவதும் மலக்குழியில் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழக்கும் கொடுமை அரங்கேறி வருகின்றன. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தடை செய்யப்பட்டாலும் இந்த துயரம் நின்றபாடில்லை.

தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாட்டில் இது தடை செய்யப்படும் என்று கூறி கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் அது மாநிலம் முழுவதும் பரவலாக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்பை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது வெளியிட்டு இருக்கிறார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 2023 - 2024 நிதியாண்டில் ரூ.3,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அது தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் முதன்மையானதாக பார்க்கப்படும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாகதான்.

சாக்கடை சுத்தம் செய்யும் மனிதர்கள்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வாசித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "பாதாளச் சாக்கடைகளையும், கழிவுநீர் தொட்டிகளையும் மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை மானுடத்திற்கே களங்கமாய் விளங்குகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுப்பதற்காக, ஒரு புதிய திட்டத்தை அண்மையில் இந்த அரசு தொடங்கியுள்ளது.

நவீன இயந்திரங்கள்
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி, நவீன இயந்திரங்கள் வாங்க வழிவகை செய்து, இத்திட்டம் தூய்மைப் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வதுடன், அவர்கள் வருவாய் ஈட்டிடவும் வழிவகுக்கும். முதற்கட்டமாக, இப்பணிபுரியும்போது இறக்க நேரிட்ட இப்பணியாளர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சிறப்பு மானியம்
அதேபோல் இப்பணியில் தற்போது ஈடுபட்டுள்ள நபர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து பெருநகரச் சென்னை பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். தேவையான பயிற்சியுடன் இயந்திரங்களையும், பாதுகாப்புக் கருவிகளையும் கொள்முதல் செய்திடவும் சிறப்பு மானியம் வழங்கப்படும். இந்த முன்னோடி முயற்சியின் அடிப்படையில், இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்." என்றார்.












Click it and Unblock the Notifications