ஏமாந்த தமிழக மாஜி டிஜிபியின் மனைவி.. போனில் பேசியதால் வந்த வினை! ரூ.90,000 போச்சே.. மக்களே கவனம்
சென்னை: மும்பையில் இருந்து போலீஸ் பேசுவதாக கூறியதை நம்பியதால் தமிழக முன்னாள் டிஜிபியும், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனருமான ஸ்ரீபாலின் மனைவி காமலி ரூ.90,000 இழந்துள்ளார். இதனால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் ஸ்ரீபால். இவர் 1962ம் ஆண்டில் ஐபிஎஸ்ஸாக பணியில் சேர்ந்தார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணி செய்தார்.

கடந்த 1980 முதல் 1985ம் ஆண்டு வரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றி இருந்தார். இவர் 1991 முதல் டிஜிபியாக பணியாற்றினார். 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்றார்.
கடந்த 2014ம் ஆண்டு தனது 76வது வயதில் ஸ்ரீபால் காலமானார். ஸ்ரீபாலின் மனைவி பெயர் கமலி. இவர் டாக்டர் ஆவார். கமலி தற்போது தி நகரில் உள்ள கண்ணதாசன் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 24ம் தேதி ஸ்ரீபால் மனைவி கமலிக்கு ஒரு போன்கால் வந்தது. அதனை அவர் எடுத்து பேசினார்.
அப்போது எதிர்முனையில் பேசியவர் தன்னை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டதோடு, மும்பையில் இருந்து பேசுகிறோம் என தெரிவித்தார். அதன்பிறகு ‛‛உங்களின் செல்போன் எண் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த செல்போன் எண் இன்னும் 2 மணிநேரத்தில் முடக்கம் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி செல்போன் எண் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதால் உங்களையும் கைது செய்ய உள்ளோம்'' என கூறினார்.
இதனால் கமலி அதிர்ச்சியடைந்தார். அதன்பிறகு அந்த நபர், ‛‛உங்களின் செல்போன் எண் சட்டவிரோத செயல்படுத்தப்பட்டுள்ளதால் ரூ.90,000 அனுப்பி வைத்தால் உங்களின் பணப்பரிவர்த்தனைகள் பற்றிய விபரங்களை சரிபார்த்து செல்போன் எண்ணை பிளாக் ஆகாமல் தடுக்கிறேன். அதன்பிறகு மீண்டும் ரூ.90 ஆயிரம் உங்களின் வங்கி கணக்குக்கே திரும்ப செலுத்தப்படும்'' என கூறினார்.
இதையடுத்து கமலி ரூ.90,000யை அந்த நபருக்கு ஜி-பே மூலம் அனுப்பி உள்ளார். மேலும் அவர் தனக்கு வந்த போன்கால் மற்றும் ரூ.90,000 அனுப்பிய விஷயத்தை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அப்போது அவர்கள் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அவர்களால் பேச முடியவில்லை. அப்போது தான் அது சைபர் க்ரைம் மோசடி என்பது தெரியவந்தது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட கமலி சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ரூ.90,000 பணத்தை இழந்தது தமிழக முன்னாள் டிஜிபியின் மனைவி ஆவார். இவர் ஏமாந்துள்ள நிலையில் பொதுமக்களையும் சைபர் கிரைம் மோசடிக்காரர்கள் இதே டெக்னிக்கை பயன்படுத்தி எளிதாக ஏமாற்றலாம்.
இதனால் இப்படியான போன்கால் வந்தால் உடனடியாக பொதுமக்கள் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது. மாறாக பணத்தை வழங்கினால் சைபர் கிரைம் மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது என காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications