வேற லெவலில் மாறப்போகும் தமிழ்நாடு.. சுற்றுலா மாநாட்டில் 3 முக்கிய அறிவுப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 'தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு' நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்து, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
சுற்றுலாத் துறையில் தனியாா் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், பொது மற்றும் தனியாா் துறை முதலீடுகளை ஈா்க்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் தனியாா் முதலீடுகளை ஈா்க்க 'தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு' நடத்த சுற்றுலாத் துறை சார்பில் திட்டமிடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் குழுமத்தின் ஃபோா் பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதியில் இன்று மற்றும் நாளை நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். ரூ. 22,794 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 65,937 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.
இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். உலக சுற்றுலா வரைபடத்தில் கலை மற்றும் பண்பாட்டு சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு இடம்பெற அடுத்தாண்டு ஜனவரி மாதம் போட்டிகள் நடத்தப்படும்.
மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான அடிப்படை வசதிகள் வழங்கும் வகையில், சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைத்து ரூ. 100 கோடியில் உலக தரத்திலான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும்.
2023 ஆண்டு அறிவிப்பின்படி, சிப்காட் நிறுவனம் சுற்றுலா நிறுவனங்களை கண்டறிந்து புதிய சுற்றுலா வசதிகளை உருவாக்கவுள்ளது. முதல்கட்டமாக கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தூத்துக்குடி மாவட்டங்களில் 4 சிறப்பு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முதலீடுகளை ஈர்க்க விருப்பப் பதிவு கோரிக்கைகள் அழைக்கப்பட்டுள்ளது. 2 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் 31 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பார்க், தீம் பார்க் உள்ளிட்டவை இந்த இடங்களில் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications