Awards: எம்.என்.ராஜம், எஸ்.பி.முத்துராமனுக்கு தமிழக அரசின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது!
சென்னை: புகழ்பெற்ற மூத்த கலைஞர்களான நடிகை எம்.என். ராஜம் மற்றும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்" விருதுகளை அறிவித்துள்ளது. இதில் 2024ஆம் ஆண்டுக்கான விருதை எம்.என். ராஜமும், 2025ஆம் ஆண்டுக்கான விருதை எஸ்.பி. முத்துராமனும் பெறவுள்ளனர்.
தமிழ் திரையுலகில் வாழ்நாள் பங்களிப்பைப் போற்றும் வகையில், "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்" விருதை 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 2022-ல் ஆரூர்தாஸ், 2023-ல் கவிஞர் மு. மேத்தா மற்றும் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விருதை வழங்கி கௌரவித்தார்.

நாடகங்களில் சிறு வயதிலேயே கலைப் பயணத்தைத் தொடங்கிய எம்.என். ராஜம், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். 'ரத்தக்கண்ணீர்', 'நாடோடி மன்னன்', 'பாசமலர்' என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார்.
மூத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் 'களத்தூர் கண்ணம்மா'வில் உதவி இயக்குநராக சினிமாவுக்குள் நுழைந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்களை வைத்து 'முரட்டுக்காளை', 'தர்மத்தின் தலைவன்', 'குரு சிஷ்யன்', 'சகலகலா வல்லவன்', 'ஜப்பானில் கல்யாணராமன்' உட்பட 70க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
இந்த உயரிய விருது பெறும் எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமன் இருவருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும், நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிப்பார்.












Click it and Unblock the Notifications