கார், பைக்கிற்கு ஃபேன்சி எண் வேண்டுமா? அடியோடு மாறும் ரூல்ஸ்! கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் வாகனங்களுக்கு பேன்சி எண் வாங்க இனி புதிய விதிகள் பின்பற்றப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அது போல் அந்த எண்களுக்கு எவ்வளவு கட்டணம் பெறப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
பைக், ஆட்டோ, கார், பஸ், லாரி என வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஒரு வீட்டில் ஒரு பைக்கோ அல்லது காரோ இருக்கும். ஆனால் தற்போது ஒரு வீட்டில் 4 பைக், 2 அல்லது 3 கார்கள் இருக்கின்றன.

அதாவது ஆளுக்கு ஒரு கார், பைக் என்ற நிலை வந்துவிட்டது. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்த வாகனங்களில் நிரப்பப்படும் எரிபொருளால் வெளியேறும் புகை, காற்று மாசை ஏற்படுத்துகிறது.
வாகனங்களை வாங்கும் போது தங்களுக்கு ராசியான அல்லது பிடித்தமான அல்லது ஃபேன்சி எண்களை வாங்கவே வாகன ஓட்டிகள் விரும்புகிறார்கள். இதற்காக பல லட்சம் ரூபாய் (வாகனத்திற்கேற்ப) பணம் செலுத்தி பிடித்த எண்களை வாங்குகிறார்கள். இந்த பணம், வாகனங்களை வாங்கும் பணத்திற்கு ஈடாக உள்ளது.
இதனால் பலர் ஃபேன்சி எண்களை வாங்குவதில்லை. இந்த நிலையில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இதன்படி, தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி எண்களை ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வர மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் ஏலம் முறையில் பேன்சி எண்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 2ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வாகனத்தின் உரிமையாளர்கள் Parivahan (https://fancy.parivahan.gov.in) இணையதளத்தில் பதிவு செய்து தங்களுக்கு தேவையான பேன்சி எண்களை தேர்வு செய்ய வேண்டும். அத்துடன் 48 மணி நேரத்தில் பணத்தை செலுத்த வேண்டும்.
இதைத் தொடர்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடக்கும். அதன் முடிவுகளும் அன்றே வெளியிடப்படும். ஏலத்தில் பேன்சி நம்பரை எடுத்த வாகன உரிமையாளர் 30 நாட்களுக்குள் வாகனத்தை பதிவு செய்யவில்லை என்றால் அந்த எண் ஒதுக்கீடானது ரத்து செய்யப்பட்டுவிடும். ஃபேன்சி எண்களுக்கான அடிப்படை விலை ரூ 2000 முதல் 2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விதிகள் தொடர்பாக ஏதாவது ஆட்சேபனை மற்றும் கருத்துக்கள் 30 நாட்களில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை தலைமைச் செயலகம் என்ற முகவரிக்கு அனுப்பலாம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications