சென்னை கிண்டியில் புதிய பசுமை தலைமைச்செயலகம்? துரைமுருகன் அன்று சொன்னது.. அப்படியே ஒத்துப்போகுது
சென்னை: சென்னை கிண்டியில் குதிரை பந்தயம் நடைபெறும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் புதிய பசுமை தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடம், குத்தகை அடிப்படையில் சென்னை ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்டு இருந்தது. ரூ.730 கோடி வாடகை பாக்கி அடிப்படையில் அதனை கையகப்படுத்த முடிவு செய்துள்ளதாம்.
சென்னை கிண்டியில் வேளச்சேரி சாலையில் ரேஸ்கோர்ஸ் மைதானம் என்பது உலகப்புகழ் பெற்றது. அந்த காலத்தில் குதிரை பந்தயங்கள் இங்குதான் நடைபெறும். கவர்னர் மாளிகையின் மேற்கு நுழைவு வாயிலுக்கு எதிரே உள்ள பகுதியில் அமைந்துள்ள குதிரை பந்தய மைதானம் மொத்தம் 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் ஆகும். இந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது ஆகும். குத்தகை அடிப்படையில் சென்னை ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தின் குத்தகை காலம் 2045-ம் ஆண்டு வரை உள்ளது..

இந்நிலையில் கிண்டி ரேஸ் கிளப் குத்தகை விதிமுறைகளை மீறியதாகவும், பல ஆண்டுகளாக சுமார் ரூ.730 கோடி வாடகை பாக்கி வைத்திருப்பதாகவும் கூறி அந்த இடத்தை திரும்பபெறும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதற்காக கடந்த செப்டம்பர் 9ம் தேதி, ரேஸ் கிளப் சீல் வைக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவு காரணமாக, தற்போது அந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருககிறது. எனினும் இன்னும் சில தினங்களில் கிண்டி மைதானம் முழுமையாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
தமிழக அரசு மீட்டுள்ள கிண்டி குதிரை பந்தய மைதானத்தில் புதிய பசுமை தலைமைச்செயலகம் கட்ட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையின் மையப்பகுதியில் அதுவும் ஆளுநர் மாளிகை எதிரே மிகப்பெரிய காலியிடம் அரசுக்கு வேண்டும் என்றால், நிச்சயம் கிடைக்காது. ஒரே நேரத்தில் 160 ஏக்கர் நிலம் அரசுக்கு கிடைத்துள்ளது. அதுவும் கிண்டியில் கிடைத்திருக்கிறது. இந்த இடத்தை சுற்றி நான்குபுறமும் சாலைகள் இயல்பாகவே அமைந்துள்ளன. கூப்பிடும் தூரத்தில் கிண்டி ரெயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் அமைந்துள்ளது. வேளச்சேரி பிரதான சாலை, அண்ணா சாலை இதன் அருகிலேயே அமைந்துள்ளது. கிண்டியில் இருந்து வெறும் சில கிலோ மீட்டர் தூரத்தில் விமான நிலையமும் உள்ளது.
எனவே குதிரை பந்தய மைதானத்தில் தலைமைச்செயலகம் கட்டினால் பல ஆண்டுகளுக்கு அது நிலைத்து இருக்கும் என்பதுடன், இட நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பு இல்லை. சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள இங்கு தலைமைச்செயலகம் கட்டுவதால் பொதுமக்களும் எளிதாக அணுக முடியும். எனவே தான் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முழு அளவில் தயாராகி வருகிறதாம். எனினும் பல்வேறு ஆய்வுகளை செய்தபின் தான் அதிகாரப்பூர்வமாக தலைமை செயலகம் கட்டும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடக்கூடும் என்கிறார்கள்..
முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட தலைமை செயலகம் , 2011ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 2021ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த போது, முதல்வர் ஸ்டாலின், தலைமை செயலகம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை..
அதேநேரம் அமைச்சர் துரைமுருகன் மட்டும் கடந்த ஆண்டு சட்டசபையில் கூறும் போது, விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சி காலத்தில் ஒரு சட்டமன்றத்தை கட்டுவார். அவர் நினைத்தால் கிண்டி ரேஸ்கோர்ஸ் இடத்தில் கூட கட்டலாம். ஏனென்றால் அவர்கள் பணம் கட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்றார். கடந்தாண்டு சட்டசபையில் அவர் பேசியதை பார்க்கும் போது, இப்போதைய நடவடிக்கைகளின் படி பார்த்தால், அங்குதான் தலைமை செயலகம் அமையலாம் என்பது தெரிகிறது. எனினும் நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை எந்த அறிவிப்பும் வராது. அதிகாரப்பூர்வமாக அரசு அறிவிக்க கண்டிப்பாக சில மாதங்கள் ஆகும்.












Click it and Unblock the Notifications