அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்? மத்திய அரசுக்கு இணையான போனஸ் தேவை.. கோட்டைக்கு புது கோரிக்கை
சென்னை: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு, போனஸ் அறிவித்துள்ளது தமிழக அரசு.. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு, புதிய கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியிருக்கிறார்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றையும் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது.

அதிரடி அறிவிப்பு: அதன்படி, 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'சி' மற்றும் 'டி' பிரிவு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023- 2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் பணிபுரிந்த முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுகிறது.
சிறப்பு காலமுறை ஊதியம்: இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு போனசாக ரூ. 7 ஆயிரம் வழங்குவது போலவே, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிவோருக்கும் பாரபட்சமின்றி முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும் என்று புதிய கோரிக்கை எழுந்துள்ளது.. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இந்த கோரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்திருக்கிறார்கள்.
இந்த கோரிக்கை குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறும்போது, "2006 ம் ஆண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட போனஸ் சட்டத்தின்படி அந்த ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்கள் ரூ.7 ஆயிரம் போனசாக பெற்று வருகிறார்கள்.. அதனை பின்பற்றி தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
கருணைத்தொகை: இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ. 3 ஆயிரம் மட்டுமே போனசாக வழங்குவது ஏற்புடையது கிடையாது.. எனவே, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ரூ.7 ஆயிரம் போனஸ் வழங்க அரசு ஆணை வெளியிட வேண்டும்.
குறிப்பாக, A மற்றும் B பிரிவு அலுவலர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட கருணைத் தொகை, தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications