பிஞ்சு உயிர்களுடன் விளையாடும் தவெக அரசு! GH-களில் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் மருந்து தட்டுப்பாடு
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கான உயிர் காக்கும் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிரை காக்கும் சர்ஃபேக்டன்ட் மருந்து தேவைப்படும் போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் சுவாசம் சீரடையவும், நுரையீரல் சுருங்காமல் விரியவும் இந்த சர்ஃபேக்டன்ட் மருந்து மிகவும் முக்கியமானது. இத்தனைக்கு இந்த மருந்து சிறப்பு மருந்துகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஆனால் இந்த மருந்துக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இல்லாமல் தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்த மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.
இது குறித்து விசாரித்த போது மருந்துகளின் தேவை, இருப்பு என்ன என்பது குறித்த கணக்கை சரியாக எழுதி வைத்து ஆர்டர் செய்யாததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் சில மருத்துவமனைகளில் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான நிதியை பயன்படுத்தி தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கியோ அல்லது பிற மருத்துவமனைகளில் வாங்கியோ குழந்தைகளின் உயிரை காப்பாற்றி வருகிறார்களாம்.

மக்கள் உயிர்காக்கும் மருந்தை இருப்பு வைத்துக் கொள்வதிலும் தவெக அரசு மெத்தனம் காட்டி வருவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைமாதத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்கப் பயன்படுத்தப்படும் முக்கியமான சர்ஃபாக்டன்ட் (Surfactant) மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையளிக்கிறது. பிறந்த சில மணி நேரங்களிலேயே சுவாசிப்பதில் சிரமப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த மருந்து மிகவும் அவசியமானதாகும்.
பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்க வேண்டிய அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து கிடைக்காததால் எந்த ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரும் ஆபத்தில் சிக்கக்கூடாது. அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது அரசின் முதன்மையான பொறுப்பு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அது போல் முன்னாள் எம்எல்ஏவும் மருத்துவருமான எழிலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 59 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை பிரசவங்கள் நடக்கின்றன. அப்படி பார்த்தால் ஆண்டுக்கு 4.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடக்கின்றன.
தமிழகத்தில் 12 முதல் 14 சதவீதம் வரை குறைபிரசவங்கள் இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் தோராயமாக ஆண்டுக்கு சுமார் 63 ஆயிரம் முதல் 72 ஆயிரம் குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறக்கின்றன.
குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில் 30 சதவீதம் வரை தீவிர நுரையீரல் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். சுவாச கோளாறுகளால் ஆண்டுக்கு தமிழகத்தில் 1500 குழந்தைகள் இறக்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்த மருந்தின் விலை டோஸின் அடிப்படையில் ரூ 5 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
