மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் எவை எவை..? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்த நிலையில், தற்போது மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை தமிழக அரசின் மதுவிலக்கு அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சராக விஜய் பதவியேற்றவுடன் 717 மதுபான கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.

தவெக அரசால் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் பலவும் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. பல இடங்களிலும், மூடப்படும் என அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் திறந்திருப்பதாக அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை பற்றிய தகவலை வழங்கவும், மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவலை கேட்டு, டாஸ்மாக் நிறுவனத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக ஒருவர் அதற்கு ஜூன் 5 ஆம் தேதி அனுப்பிய பதிலில், 'கோப்பு நிலுவையில் உள்ளது; எனவே, தகவல் வழங்க இயலாது' என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எந்த எந்த ஊரில் எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது என்ற பட்டியலை மண்டல வாரியாக, மாவட்ட வாரியாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை மதுவிலக்கு துறை அமைச்சர் கே.விக்னேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் அமைந்திருந்த மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, சென்னை மண்டலத்திற்குட்பட்ட 82 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், கோயம்பத்தூர் மண்டலத்திற்குட்பட்ட 179 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
சேலம் மண்டலத்திற்குட்பட்ட 82 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், திருச்சி மண்டலத்திற்குட்பட்ட 84 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், மதுரை மண்டலத்திற்குட்பட்ட 290 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், 12.05.2026-ம் தேதியிலிருந்து படிப்படியாக மூடப்பட்டன. தற்பொழுது, தமிழ்நாடு முழுவதும் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இனி வரும் காலங்களில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அமைவிடங்கள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் அல்லது டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பெறப்படும் புகார் மனுக்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு, விதிமுறைகளின்படி நடவடிக்கை வரையறுக்கப்பட்டுள்ள தகுந்த எடுக்கப்படும்.
இதன் மூலம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சீரிய சூழலை உருவாக்குவதோடு, மதுவினால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை குறைக்கும் நடவடிக்கையாகவும் இது அமைவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மூடப்பட்ட கடைகள் pic.twitter.com/buG32HjFhL
— Vignesh TVK (@VigneshTvkCbe) June 15, 2026












Click it and Unblock the Notifications