விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.. இல்லை என்றால்.. எடப்பாடி கொந்தளிப்பு
சென்னை: திருவண்ணாமலை செய்யாறு தொகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என்றும் இல்லையெனில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்தும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் செய்யாறு சிப்காட் அலகு 3 என்ற பெயரில் 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த ஆட்சி காலத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. தொடந்து அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 126 நாட்களாக நடைபெற்றது. போராட்டக்கார்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், கடந்த 4 ஆம் தேதி நடைபயணம் சென்ற போது பேருந்தின் கண்ணாடியை உடைத்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 7 பேர் மீது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அதாவது, அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்கியராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விவசாயிகள் 7 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் இல்லையெனில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்தும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி கண்டனம்: இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை 'சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்' என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை இந்த விடியா திமுக அரசு பிறப்பித்துள்ளது.
அமைதியாக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டமா? அண்ணாமலை டென்ஷன்.. தமிழக அரசு மீது கடும் தாக்கு
இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும், அப்பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக அறப் போராட்டத்தைக் கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாய பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4.10.2023 அன்று, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முள் வேலிகளைப் போல: போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும் விடியா திமுக அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, எந்தவிதமான முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது தொடர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்ற காரணத்தைக் காட்டி, தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை இந்த விடியா திமுக அரசு போட்டிருக்கிறது.
மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போட்டிருக்கக் கூடிய முள் வேலிகளைப் போல, அங்கே முள் வேலிகளைக் கொண்டுவந்து தடுப்புகளை அமைத்து, பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களையெல்லாம் கொண்டுவந்து நிறுத்தி, விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது.
நியாயமான காரணங்கள்: எனது தலைமையிலான கழக அரசு பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை சந்தித்திருக்கிறது. இல்லாத காரணங்களையெல்லாம் சொல்லி திமுக பல அமைப்புகளைத் தூண்டிவிட்டபோதிலும், அந்தப் போராட்டங்களுக்கெல்லாம் கழக அரசு அனுமதி வழங்கி, காவல் துறை பாதுகாப்பையும் வழங்கியது. நியாயமான காரணங்கள் இருந்தபட்சத்தில் அவைகளை கழக அரசு நிறைவேற்றியும் தந்திருக்கிறது.
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுப்பதற்கு துப்பில்லாத, போராட்டம் உருவாவதற்குண்டான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தீர்த்து வைப்பதற்கும் வக்கில்லாத இந்த விடியா திமுக அரசு, காவல் துறையை தன்னுடைய ஏவல் துறையாக பயன்படுத்துவதை மட்டும் கனக் கச்சிதமாக செய்துகொண்டு வருகிறது.
அதிமுக போராட்டம் நடத்தும்: அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தங்கள் விவசாய நிலங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வேளாண் பெருங்குடி மக்கள் நியாயமான அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும், விடியா திமுக அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக விடியா திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications