சூப்பர்.. திருநங்கைகள் கல்லூரி செலவை அரசே ஏற்கும்! ஊதியத்திற்கும் மானியம்- தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த நிலையில், இதில் மூன்றாம் பாலினத்தவருக்கான பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
கடந்த பிப்.1இல் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழ்நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த வாரம் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்க மறுத்த நிலையில், தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப். 15ஆம் தேதி பதிலளித்தார்.
தமிழ்நாடு பட்ஜெட்: இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது. இந்த பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் 44042 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல உயர் கல்வித் துறைக்கு 8212 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் திட்டங்கள் குறித்தும் இதில் பல அறிவிப்புகள் இருந்தன. 2007இல் கொண்டு வரப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் 7890 கோடி செலவில் செயல்படுத்தப்படும். தருமபுரி, கிஷண்கிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 40 லட்சம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் மேலும், அப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் இது உதவும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர்: மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனாக 35 ஆயிரம் ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெரும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்றாம் பாலினத்தவருக்கான பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
நமது நாட்டில் இன்னுமே மூன்றாம் பாலினத்தோருக்கான உரிமைகள் கிடைப்பதில்லை. அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்கப் பலரும் மறுத்தே வருகின்றனர். இதனால் அவர்கள் படிக்கவும் வேலைக்குச் செல்லவும் உரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தே வருகின்றனர்.

கல்லூரி செலவை அரசே ஏற்கும்: இதற்கிடையே மூன்றாம் பாலினத்தோரின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்று தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
பெரும்பாலும் மூன்றாம் பாலினத்தவர்களை குடும்பங்கள் ஏற்பதில்லை. இதனால் அவர்கள் தனித்து இருக்கும் சூழல் ஏற்படும் நிலையில், அவர்களுக்கு இது மிக பெரியளவில் உதவியாக இருக்கும்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோருக்கு நேரடியாக வேலை வாய்ப்பை தரும் புதிய நிறுவனங்களுக்கு அவர்களின் ஊதியத்தில் 10% ஊதிய மானியத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும் என்றும் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications