ஈடி வலையில் திமுக? பஞ்சாயத்து செய்த பாஜக! திடீரென டெல்லிக்கு பறந்த ஆளுநர் ரவி.. கையில் முக்கிய ஃபைல்
சென்னை: டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை ரெய்டு, போராட்டத்தில் குதித்த பாஜகவினர் கைது என தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் இருக்கும் நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மூன்று நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். இந்த பயணத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை ஆளுநர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும், மார்ச் 20 ஆம் தேதி அவர் மீண்டும் சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர ஆர்.என்.ரவிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே எதிரும் புதிராகவுமாகவே இரு தரப்பும் செயலாற்றி வருகிறது. குறிப்பாக ஆளுநர் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சனாதனம் குறித்து பேசுவதும் திராவிட சித்தாந்தத்துக்கு எதிராக பேசுவதும் திமுக தலைமையை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் பல முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் வரை திமுக அரசு சென்றிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டிருக்கிறது.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்து தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்த நிலையில் திமுக நாகரிகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் பேச கடும் எதிர்ப்பு எழுந்ததால் தனது கருத்தில் இருந்து பின்வாங்கியதோடு மன்னிப்பும் கூறினார்.
தொடர்ந்து சில நாட்களில் தமிழகத்தில் அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. குறிப்பாக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாக கூறி டாஸ்மாக் தலைமை அலுவலகம், சில மதுபான நிறுவனங்களின் அலுவலகங்கள், டாஸ்மாக் குடோன்களில் ஆய்வு நடைபெற்றது. அந்த ஆய்வின் அடிப்படையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக்கில் முறைகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
தொடர்ந்து நேற்று டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து தமிழக பாஜக போராட்டத்தை அறிவித்தது. எழும்பூரில் உள்ள தலைமையகம் முற்றுகையிடப்படும் என அறிவித்த நிலையில் பல இடங்களில் பாஜகவினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாலை 7 மணி வரை பெண்கள் விடுதலை செய்யப்படாததால் அண்ணாமலை போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இப்படியாக பாஜக திமுக இடையே நேரடி மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 3 நாள் பயணமாக அவர் டெல்லி சென்றிருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் தொடர் சட்ட ஒழுங்கு பிரச்சனை, மும்மொழி கொள்கை தொடர்பாக நடந்த போராட்டம், மத்திய அரசு மீதான விமர்சனங்கள், ஆளுங்கட்சியின் செயல்பாடு, அமலாக்கத்துறை சோதனை, சோதனையின் அடிப்படையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் பாஜக போராட்டம் ஆகியவை குறித்து பேசலாம் என கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் ஆளுநர் மத்திய அமைச்சருடன் சந்திப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொண்ட பின் மார்ச் 20ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வருவார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications