உதவி தொகையை இழுத்தடிக்கும் தமிழக அரசு! சிக்கலில் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள்! விஜய் கவனிப்பாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் படித்து வரும் தமிழக மாணவர்களுக்கு, சரியான நேரத்தில் உதவித்தொகை கிடைக்கிவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதை முதலமைச்சர் விஜய் உடனடியாக கவனத்தில் கொண்டு, பிரச்சனையை சரி செய்வாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

SC, ST சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில, அன்னல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வெளிநாடுகளில் படிப்பை தொடங்கி பல மாதங்கள் ஆகியும், இன்னும் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று மாணவர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். இன்று இதுகுறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை கவனம் பெற்றிருக்கிறது.

Tamil Nadu Govt Delays Scholarships

ஏன் இந்த தாமதம்?

உதவித்தொகையை நம்பி.. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். கட்டணம், தங்குமிட கட்டணம் மற்றும் அன்றாட செலவுகளுக்கு.. நிதி குறிப்பிட்ட காலத்தில் விடுவிக்கப்படாததால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உதவித்தொகை வழங்குவதற்கான செலவு கணக்குகள் மற்றும் ஆவணங்களை மாணவர்கள் ஏற்கெனவே சமர்ப்பித்துவிட்ட போதிலும், நடைமுறை சிக்கல்கள் மற்றும் நீண்ட கால சரிபார்ப்பு காரணமாகவே இந்த தாமதம் ஏற்படுவதாக மாணவர்களும், பெற்றோரும் கூறுகின்றனர்.

RTI மூலம் வெளியான தகவல்கள்

விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் ஜே பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர் என டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. RTI மூலம் சமூக ஆர்வலர் ஏ.ஞானபிரகாஷ் பெற்ற அதிகாரப்பூர்வ பதிலின்படி..

மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் - 365 பேர்
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஏற்கெனவே சேர்ந்வர்கள் - 164 பேர்
இன்னும் சேராதவர்கள் அல்லது சேர்க்கை நடைமுறைகளை முடிக்க வேண்டியவர்கள் - 201 பேர்

வெளிநாடுகளில் 164 மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், வெறும் 65 மாணவர்களுக்கு மட்டுமே மொத்தம் ரூ.19.53 கோடி உதவித்தொகையாக விடுவிக்கப்பட்டிருக்கிறது தெரிய வந்திருக்கிறது.

உதவித்தொகையின் முக்கியத்துவம்

ஆண்டுக்கு ரூ.8 லட்சம் மற்றும் ரூ.8-12 லட்சம் வரை வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்குதான் இந்த திட்டம் பொருந்தும். ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவான வருமானம் என்பது, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாகவும் இருக்கலாம் ரூ.5 லட்சமாகவும் இருக்கலாம். இதெல்லாம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள்தான். இந்த குடும்பத்திலிருந்து ஒரு மாணவர் வெளிநாட்டில் தங்கி படிக்கிறார் எனில், அவருக்கு அரசு கொடுக்கும் உதவித்தொகை சரியான நேரத்தில் கிடைத்தால்தான்.. அடுத்தடுத்த நாட்களை அவரால் ஓட்ட முடியும்.

மாதக்கணக்கில் உதவித்தொகை விடுவிக்கப்படாமல் இருந்தால், ரூம் வாடகை, உணவு, கல்வி கட்டணம், கல்விக்கான உபகரணங்களை வாங்கும் செலவு, பயணம் உள்ளிட்டவற்றுக்கான செலவுகளை மாணவரால், அவரது குடும்பத்தினரால் எப்படி சமாளிக்க முடியும்?

படிக்க போன மாணவர்களுக்கு இப்படி சிக்கலா?

இந்த அழுத்தம் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியிருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர். படிக்கத்தான் அங்கு போயிருக்கிறார்கள். ஆனால், நிம்மதியில்லாமல், அடுத்த நாள் என்ன நடக்குமோ? என்று மாணவர்கள் யோசிப்பதால், அவர்களால் நிச்சயம் கல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகிவிடும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும் எச்சரிக்கின்றனர்.

சேமிப்பை காலியாக்கும் பெற்றோர்

பல ஆயிரம் கி.மீக்கு அப்பால் இருக்கும் தனது மகன்/மகள் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கஷ்டப்படக்கூடாது, கல்விக்கட்டணத்திற்காக மற்றவர்கள் முன்னிலையில் கை கட்டி நிற்க கூடாது என்கிற காரணத்திற்காக, அம்மாணவர்களின் பெற்றோர், தங்களிடம் உள்ள கொஞ்ச நஞ்ச சேமிப்பையும் அடகு வைத்து, விற்று பணத்தை அனுப்பி உதவியுள்ளார்கள். ஆனால், இதெல்லாம் எத்தனை நாட்களுக்கு தாங்கும்?

வாழ்க்கைக்குள் நுழையும்போதுதான் போராட்டம் தொடங்கும். ஆனால், இங்கு படிக்கவே போராட வேண்டிய சூழல் உள்ளது.

திட்டத்தை மாற்றிய திமுக

இன்று வரைக்கும் கூட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீது சாதிய வன்கொடுமைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் எனில், கல்வியை கருவியாக பயன்படுத்தி.. இந்த சமூக மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். இதை புரிந்த அப்போதைய அதிமுக அரசு 2003ல் வெளிநாட்டில் படிக்கும் SC, ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்தது. பின்னர், கடந்த 2023-24ம் ஆண்டில், திமுக அரசு இதை மேலும் விரிபடுத்தி, கூடுதலான மாணவர்கள் பயன் பெரும் வகையில் திட்டத்தை மேம்படுத்தியது.

என்ன செய்யப்போகிறது தவெக?

எரியும் காட்டுக்கு மத்தியில், வானத்தை நோக்கி துளிர்க்கும் செடி போல.. இந்த திட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தை கொடுத்திருந்தது. ஆனால், துளிர்விட்ட செடியை தவெக அரசு காய வைத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் தற்போதைய விமர்சனம்.

மாணவர்களின் இந்த நிலைமை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும். முதலமைச்சர் விஜய் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+