தமிழகத்தில் 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி.. அகவிலைப்படி உயர்வு.. ரியல் தீபாவளி பரிசு
சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கைய ஏற்று மத்திய அரசை பின்பற்றி தமிழகத்திலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 50% ஆக உள்ள அகவிலைப்படியை 53%ஆக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இனி 53 சதவீதம் அகவிலைப்படி கிடைக்க போகிறது. 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியாக இது அமைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கடந்த அக்டோபர் 16ம் தேதி நடந்தது. அதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை அகவிலைப்படியாக பெற்று வருகிறார்கள்.

இப்போது முதல், அகவிலைப்படி 53 சதவீதமாக உயரும். கடந்த ஜூலை 1-ந் தேதி முதல், அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த கடந்த 16ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.9 ஆயிரத்து 448 கோடி செலவாகும் என்றாலும் 49 லட்சத்து 18 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 64 லட்சத்து 89 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையிலும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்தால் அதன்படியே தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்த வேண்டும என்று கோரிக்கை எழும். தமிழக அரசும் அகவிலைப்படியே உயர்த்திவிடும்.
இந்த சூழலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் அண்மையில் கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். அந்த மனுவில் "மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், சிறப்பு கால முறை ஊதிய பணியாளர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் அகல விலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த நிலுவைத்தொகை விரைவாக கிடைத்தால் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். எனவே தாமதமின்றி உடனே அறிவிக்க வேண்டும்" இவ்வாறு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைய ஏற்று மத்திய அரசை பின்பற்றி தமிழகத்திலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், " நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளது.இதேபோன்று மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் முதல்வர் இதனை கனிவுடன் பரிசீலித்து ஜூலை 1 முதல் மாநில அரசுப்பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.
இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து ஜூலை 1 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
இதனால், ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ. 1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்" இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications