டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை! ரூ.5 கோடி நிதி வழங்கிய தமிழக அரசு!
சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறை உருவாக்கிட தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை உருவாக்கிட, பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் 5 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார்.

இதன் மூலம் வரலாற்று பாரம்பரியமிக்க டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இலக்கியவியல்' என்ற தனித்துறை விரைவில் உருவாக உள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட முக்கியப் பணிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இதேபோல் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலை இராஜேந்திரன் உள்ளிட்ட மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகையும், மறைந்த ஐந்து தமிழறிஞர்கள் நெல்லைகண்ணன் உள்ளிட்டோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சித் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications