தடுமாறுது தாம்பரம்..நாளை முதல் கிளாம்பாக்கம் தான் கடைசி ஸ்டாப்! தென் மாவட்ட மக்களுக்காக சூப்பர் வசதி
சென்னை: தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் தென் தமிழகத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த அறிவிப்பு வரும் நிலையில், பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னை அசுர வளர்ச்சியை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் ஐடி நிறுவனங்களும் குவிந்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சென்னையில் குவிந்து இருக்கின்றனர்.

இதனால் சென்னை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக சென்னையின் மையப்பகுதியில் இருந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் கிளாம்பாக்கத்தில் உலக தரத்திலான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 88 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ரூ.400 கோடியில் கடந்த 2019ம் ஆண்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இவை முடியும்போது திட்டமிட்டதைவிட கூடுதலாக 25 சதவிகிதம் செலவை இழுத்தன.
இருப்பினும் ஒரு வழியாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி அது பயன்பாட்டுக்கு வந்தது. இப்பேருந்து முனையத்தில் 2,000க்கும் அதிகமான பேருந்துகள் வரை வந்து செல்லும், இது தவிர 270 கார்கள், 3,500 பைக்குகள் பார்க் செய்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் எஸ்கலேட்டர், தங்குமிடம், நவீன கழிப்பறை, உணவகம் என பல வசதிகள் அங்கு இருக்கிறது. இருந்தபோதும் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் வந்து செல்ல மக்கள் அவதி அடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் சில போக்குவரத்து கழக பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டன. இதனால் தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே போக்குவரத்துக் கழகங்கள் பேருந்துகளை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. அதில்,"தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் போக்குவரத்து காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரைப்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் மார்ச் 4-ம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இதையொட்டி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள், 3795 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் கூடுதலாக 104 பேருந்துகள் 815 நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் காரணமாக தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையில் பெற பகுதிகளுக்கு செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க படாததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். தற்போது 104 பேருந்துகள், 815 நடைகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பால் சிரமம் இன்றி பயணிக்கலாம் என்கின்றனர் பயணிகள்.












Click it and Unblock the Notifications