ஹாஸ்டலாக மாறும் வீடுகள்.. கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு! தமிழக அரசு கொடுத்த சூப்பர் சான்ஸ்
சென்னை: தமிழகத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு உரிமம் பெறாமல் இயங்கி வரும் அனைத்து மகளிர் விடுதிகளும் உடனடியாக இணையவழியில் பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, "Simple Governance" என்ற இணையதளத்தின் மூலம் இ-சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என சமூகநலத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வரும் மகளிர் விடுதிகள் கட்டாயமாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவு செயல்முறைக்கு தேவையான பல்வேறு ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்படி, விடுதி நிர்வாகிகள் நிரந்தர கணக்கு எண் (PAN), கட்டிடத்தை பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கான அனுமதி ஆவணம், தீயணைப்புத்துறை சான்று, சுகாதாரச் சான்று உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல், விடுதி வளாகத்தில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான சுய சான்று, சமையலறை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான சுய சான்று, கட்டிட உரிமை அல்லது வாடகை ஒப்பந்த ஆவணம் மற்றும் வருடாந்திர அறிக்கையும் இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள் வருமாறு:
*நிரந்தர கணக்கு எண் (PAN)
*கட்டிடத்தை பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கான உரிமம்
*தீயணைப்புச் சான்று
*சுகாதாரச் சான்று
*விடுதி வளாக பாதுகாப்பு தொடர்பான சுய சான்று
*கட்டிட உரிமை / வாடகை / ஒப்பந்த ஆவணம்
*சமையலறை மற்றும் உணவு பாதுகாப்பு சுய சான்று
*வருடாந்திர அறிக்கை
மேலும், அனைத்து மகளிர் விடுதிகளும் இணையவழியில் பதிவு செய்த பின், அதன் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பதிவு நடவடிக்கையை 31.05.2026-ஆம் தேதிக்குள் கட்டாயமாக நிறைவு செய்ய வேண்டும் என சமூகநலத்துறை தெரிவித்துள்ளது. காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு, தங்கும் வசதி மற்றும் அடிப்படை சுகாதார தரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தனியார் மகளிர் விடுதிகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறைக்குள் கொண்டு வருவதற்கான முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications