ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் கட்.. அதிரடியாக அறிவித்த தமிழக அரசு! இது தான் காரணமா? பரபரப்பு!
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு கடந்த நவம்பர் 18ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படுமென தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்த போதும், பெருமளவில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டுவர வேண்டும், அரசு துறைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால், கடந்த நவம்பர் 18 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதே நாளில் வருவாய் துறை ஊழியர்கள் SIR திருத்தப் பணிகளை முழுமையாக புறக்கணிப்போம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர்.
இதனால் அரசு பணிகள் பாதிக்காத வகையில்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தலைமைச் செயலாளர் முருகானந்தம், போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும், தொகுப்பூதிய மற்றும் பகுதிநேர ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கடுமையான எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் அன்றைய தினம் தற்காலிக மற்றும் மருத்துவ விடுப்பு தவிர எந்த வகை விடுப்பும் அனுமதிக்கப்படாது என்றும், பணிக்கு வந்தோரின் பெயர் பட்டியலை உடனடியாக மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், எச்சரிக்கையையும் மீறி, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பட்டியலை திரட்டி, அவர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் 29,755 பேரும், பள்ளிக் கல்வித் துறையில் 19,967 பேரும் உள்ளிட்ட மொத்தம் 49,722 பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதால், இவர்கள் அனைவரின் சம்பளமும் பிடித்தம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பு அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளை விவாதிக்க ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தை விரைவில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்தும் கடும் போராட்டங்கள் நடத்தப்படும் என ஏற்கனவே அந்த அமைப்பு அறிவித்திருந்தது என்பதால், அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் மேலும் அரசியல், நிர்வாக ரீதியாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications