கலக்கப் போகுது கன்னியாகுமரி.. நெல்லை மக்களுக்கு தொல்லை இல்லை! புத்தாண்டு அதுவுமா வந்த ஹேப்பி நியூஸ்!
சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட்ட பிறகு, ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 பேருக்கும் அதிகபட்சம் 1,000 பேருக்கும் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தென் மாவட்ட இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகலாம் என்று நம்பப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு முழுவதும் முன்னணியில் உள்ள நகரங்களில் சென்னை முக்கிய பங்கு வகிக்கிறது. பெங்களூருக்குப் பிறகு பெரிய ஐடி மையமாக சென்னை விளங்குகிறது. ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில், இது போன்ற ஐடி நிறுவனங்களில்லை.

இதனால், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட இளைஞர்கள் ஐடி வேலை செய்ய வேண்டுமெனில், அவசியம் சென்னை அல்லது கோவை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த பிரச்சனையை மாற்றுவதற்காகவே அரசு மாநிலம் முழுவதும் டைடல் பார்க், மினி டைடல் பார்க், டைடல் நியோ பார்க் போன்றவற்றை அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் இப்போது புதிய மினி டைடல் பூங்காக்கள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொரு பூங்காவும், தரைத்தளம் உட்பட மொத்தம் நான்கு தளங்களாக கட்டப்படும். ஒவ்வொரு கட்டிடத்திற்கும் சுமார் 37 கோடி ரூபாய் மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த மூன்று மினி டைடல் பூங்காக்களும் 18 மாதங்களில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அரசு திட்டமிட்டுள்ளது. கட்டிடத்திலிருந்து அலுவலக வசதிகள் வரை அனைத்தும் நவீன முறையில் அமைக்கப்பட்டு, ஐடி நிறுவனங்கள் எளிதாக செயல்படும்படி சூழல் உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தென் மாவட்ட இளைஞர்கள் தங்கள் சொந்த ஊர்களிலேயே நல்ல சம்பளத்துடன் ஐடி வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
குடும்பத்துடன் வாழும் வசதியும் கிடைக்கும். அதேசமயம், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், தென் தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பெரிய முயற்சியாக இந்த மினி டைடல் பூங்கா திட்டம் கருதப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இங்கு பல ஐடி நிறுவனங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications