தமிழ்நாட்டுக்கு தினமும் 5000 கன அடி நீர் திறங்க.. கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!
டெல்லி: தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய தண்ணீரைத் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், டெல்லியில் காணொளிக் காட்சி மூலம் இன்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாகக் கோடைக் காலத்திலேயே தமிழ்நாட்டில் பரவலாகக் கோடை மழை பெய்யும். இருப்பினும், இந்தாண்டு பெரியளவில் எங்கும் கோடை மழை பெய்யவில்லை. அதைத் தொடர்ந்து பருவமழையும் கூட பெரியளவில் கை கொடுக்கவில்லை.

வழக்கமான அளவை காட்டிலும் பருவமழை வெகுவாக குறைந்தே இருந்தது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை.. இதனால் விவசாயிகள் கலகத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகாவிலும் கூட நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிகப் பெரியளவில் மழை இல்லை.. இந்தாண்டு மழை சற்று குறைவாகவே பெய்துள்ள நிலையில், கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய பிரதான அணைகளும் நிரம்பவில்லை. இப்படி மழை இல்லை என்று கூறி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நீரைத் தரக் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த முறையும் கூட உச்ச நீதிமன்றம் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு நீர் வழங்கவில்லை.. இந்த மாதம் 37.9 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டிய நிலையில், இருப்பினும் கர்நாடக அரசு இன்னும் வழங்கவில்லை. இப்படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தர மறுக்கும் நிலையில், இதனால் டெல்டா விவசாயிகள் ஆபத்தில் உள்ளனர்.
போதியளவில் நீர் கிடைக்கவில்லை என்றால் விளைச்சல் இருக்காது என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவைக் கர்நாடகா பின்பற்ற மறுப்பதாகவும் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடக மீது தமிழ்நாடு அரசு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிடம் இன்று புகார் அளிக்க முடிவு செய்தது. உச்சநீதிமன்ற உத்தரவைக் கர்நாடகா மீறியதாகத் தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்ட முடிவு செய்திருந்தது. இப்போது கர்நாடகா மீது காவிரி நீர் ஒழுங்காற்று குழு தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இன்று புகார் அளிக்கிறது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு சார்பில் தமிழ்நாடு அரசு சார்பில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன், காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 4,000 கன அடி நீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு முக்கிய பரிந்துரையைச் செய்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications