டெட் தேர்வு.. ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
சென்னை: டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கு துணையாக தமிழக அரசு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசு ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும், பணி உயர்வு பெறுவதற்கும் டெட் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
கடந்த 1 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது. அதில் 55 வயதுக்கு உட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று கூறியிருந்தது. அதாவது ஆசிரியர் பணியில் தொடரவதற்கும், பணி உயர்வு பெறுவதற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தான் தமிழக அரசு இந்த டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகயில், ஆசிரியர்களுக்கு துணையாக தமிழக அரசு நிற்கும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த போது கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் இது பற்றி விவாதித்து முடிவு எடுக்க கூறியிருந்தார். அந்த வகையில் தான், தற்போது சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் சுமார் 1.75 லட்சம் பேர் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து தான் 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதை, உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கி உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவுக்கு தமிழகத்தில் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications