சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. இரவோடு இரவாக தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சத்யபிரத சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் முருகானந்தம் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நாளை மறுநாள் புத்தாண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் சிலர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் முருகானந்தம் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அரசு முதன்மைச் செயலாளராக இருக்கும் அதுல்ய மிஸ்ரா டிசம்பர் 31ம் தேதி உடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்யபிரத சாகு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளராக இருந்த நிலையில், அந்தப் பதவிக்கு டாக்டர் கே.சு. பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். நில நிருவாகம் ஆணையராக பழனிசாமி இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு இரா.கஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக கஜலட்சுமி இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு கிரண் குராலா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தேவ் ராஜ் தேவ் தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் முதன்மைச் செயலாளர் /மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தேவ் ராஜ் தேவ் வகித்து வந்த அறிவியல் நகர முதன்மைச் செயலாளர் பதவி ஹர் சஹாய் மீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹர் சஹாய் மீனா வகித்து வந்த ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் பதவிக்கு மலர்விழி நியமிக்கப்பட்டுள்ளார். விக்ரம் கபூர் டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில், அவர் வகித்து வந்த அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி தலைவர் பதவி கோபால சுந்தர ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.. கோபால சுந்தர ராஜு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலாளராக இருந்த நிலையில், அந்தப் பதவி பானோத் ம்ருகேந்தர் லாலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications