நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்ட அறிவிப்பு.. அனைத்து நடவடிக்கைகளையும் வாபஸ் பெற்றது தமிழக அரசு
சென்னை: நாகை மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைக்கத் திட்ட அறிக்கையைக் கோரிய ஒப்பந்தப் புள்ளியைத் திரும்பப் பெறுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாகை அருகே நரிமணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து இந்த விரிவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.31,580 கோடியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட இந்த சுத்திகரிப்பு நிலையத்தை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நாகை மாவட்டம், திருமருகல் கிராமங்களை உள்ளடக்கிய பகுதி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. கடந்த அக். 22ஆம் தேதி நாகை மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்ட அறிக்கைக்கு ஒப்பந்தப்புள்ளி கோரி நாளேடுகளில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு விவசாயிகளும், சில அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், தமிழ்நாடு அரசு இதைத் திரும்பப் பெறவில்லை என்றால் நாகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வாபஸ் பெறுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்ட அறிக்கைக்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெட்ரோ கெமிக்கல் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications