2 வருடத்தில் இமாலய சாதனை.. தமிழ்நாடு நம்பர் 1.. குவியும் முதலீடுகள்.. ஸ்டாலினின் மாஸ்டர்பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஐடி புரட்சி தொடங்கி தொழிற்புரட்சி வரை ஏற்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்கள் இப்போதும் கூட சென்னையை ஜிடிபியில் முந்த முடியாமல் இருப்பதற்கு காரணம் கருணாநிதி போட்ட விதைதான்.

முதல் டைடல் பார்க் தொடங்கி ஹூண்டாய் முதலீட்டை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தது வரை கருணாநிதி நிகழ்த்தாத முதலீட்டு மேஜிக்குகள் இல்லை. இப்போதும் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து பிற மாநிலங்கள் வியக்க இதுவே காரணமாக இருந்தது.

இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகள் குவிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் முதலீடுகளை பெறுவதற்காக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கடந்த 2 வருடங்களில் ஏகப்பட்ட முதலீடுகள் தமிழ்நாட்டில் குவிந்து உள்ளன. தமிழ்நாட்டில் பெரு நிறுவனங்கள் செய்த முதலீடுகள், ஒப்பந்தங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

Tamil Nadu has become the E Vehicle, Manufacturing, Factory and Fintech hub under DMK rule

முதலீடுகள்: ஸ்ரீபெரும்புதூரில், பிரெஞ்சு கண்ணாடி தயாரிப்பாளரான Saint Gobain, இந்தியாவின் முதல் ஜீரோ - கார்பன் கண்ணாடியை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு அருகில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் கண்ணாடி வளாகம் உலகளாவிய உற்பத்தியில் ஒரு பெரிய பங்கை நிவர்த்தி செய்கிறது. மேலும் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கண்ணாடி தயாரிப்புகளில் 98 சதவீதத்தை இதுதான் பூர்த்தி செய்கிறது.

செயிண்ட் கோபேன் தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.3,750 கோடி முதலீடு செய்துள்ளது. சமீபத்தில்தான் இந்த நிறுவனம் கூடுதலாக 500 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் முதலீடு செய்தது. வரும் நாட்களில் மேலும் தமிழ்நாட்டில் இவர்கள் முதலீடு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில்தான் ஜப்பானைச் சேர்ந்த மிட்டுபிஷி ( MITSUBISHI ELECTRIC ) நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.தமிழ்நாட்டில் ரூபாய் 1,891 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இந்த மெகா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

சென்னையில் இவர்கள் தொழிற்சாலையை அமைக்க உள்ளனர். ஏர் கண்டிஷனர் & கம்ப்ரசர் தொழிற்சாலை தொழிற்சாலை 2 ஆயிரம் ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. 10 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளனர்.

அதேபோல் தென்கொரியாவை சேர்ந்த சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னையில் தனது முதலீட்டை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. அவர்களின் கிளை நிறுவனமான கியா நிறுவனம் கடந்த முறை தமிழ்நாட்டில் ஒப்பந்தம் செய்ய இருந்தது.

ஆனால் அதை தெலுங்கானா அரசு உள்ளே புகுந்து ஒப்பந்தம் செய்தது. இதனால் கடந்த ஆட்சியில் கியா தொழிற்சாலை சென்னைக்கு கிடைக்காமல் போனது. இந்த நிலையில்தான் அவர்களின் Hyundai நிறுவனம் தற்போது சென்னையில் முதலீட்டை விரிவுபடுத்த உள்ளது.

பெரும்பாலும் வாகன உதிரிபாக உற்பத்தி தொழிற்சாலையை Hyundai நிறுவனம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 11ம் தேதி இந்த ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.ஹூண்டாய் நிறுவனம் சென்னையில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இதற்காக முதலீடு செய்ய உள்ளது.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இந்த உற்பத்தி ஆலை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்றும், தொடக்கத்தில் 1,200 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சக் ராபின்ஸ் தெரிவித்துள்ளார்.

முதலீடுகள்: கடந்த 2 வருடங்களாக அதிரடி முதலீடுகளை மேற்கொண்ட தமிழ்நாடு அரசு வரும் நாட்களில் இன்னும் பல அதிரடி முதலீடுகளை செய்ய உள்ளது. ஜப்பானிய மருத்துவ சாதன தயாரிப்பு நிறுவனமான ஓம்ரான், சென்னைக்கு அருகில் உள்ள பெருவாயலில் தங்களின் புதிய ஆலையில் $15.7 மில்லியன் முதலீடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.

முன்பெல்லாம் சென்னைக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த முதலீடு கவனம் தற்போது மற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தற்போது இங்கே ஜிகா பேட்டரி ஆலைக்கான பணிகளையும் ஓலா துவங்கி உள்ளது. 100 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இது இருக்க போகிறது என்று ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

இந்த ஒப்பந்தத்தை பெற ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்கள் முயன்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது. அங்கே ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஓசூர் போலவே கோவை, மதுரை உள்ளிட்ட மற்ற பல மாவட்டங்களும் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் முதலீடுகள் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மிக முக்கியமான முதலீடு ஒன்று செய்யப்பட உள்ளது. அதன்படி ராணிபேட்டையில் உற்பத்தி செய்யப்படும் காலணிகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. உலக அளவில் இதனால் ராணிப்பேட்டை கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல காலனி நிறுவனமான ஹோங் பூ எனப்படும் நிறுவனம் ராணிப்பேட்டையில் முதலீடு செய்ய உள்ளது.

தைவானை சேர்ந்த இந்த நிறுவனம் ராணிப்பேட்டையில் முதலீடு செய்து, அதன்பின் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய உள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் 130 ஏக்கர் நிலத்தை அரசிடம் இருந்து அந்த நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த நிறுவனம் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். நாம் பயன்படுத்தும் பிரபல காலணிகளான நைக்கி, ரீபோக் போன்ற நிறுவனங்கள் எல்லாம் இந்த ஹோங் பூ நிறுவனம் வழியாகவே காலணிகளை தயாரிக்கின்றன. அந்த நிறுவனம்தான் தற்போது ராணிப்பேட்டையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இது போக சமீபத்தில் திருச்சியில் முதலீடு செய்வதற்காக டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. அந்த வகையில் டாடா குழுமம் சுமார் 283 ஏக்கர் நிலத்தை கைப்பற்றியுள்ளது, இந்த நிலத்தில் எலக்ட்ரிக் வாகனம் உற்பத்தி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தொழிற்சாலை, செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அல்லது எலக்ட்ரானிகஸ் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை என எதுவேண்டுமானாலும் வர வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு: 2022ம் வருடம் தமிழ்நாடு மட்டும் மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் இந்த முதலீடுகளை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா காரணமாக லாக் டவுன் இருந்த 2021 இறுதி கட்டங்களிலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும். இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

முக்கியமாக தமிழ்நாடு அரசின் 20 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பு கொண்ட பரந்தூர் விமான நிலையம் வரும் காலங்களில் மேலும் முதலீட்டை இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரந்தூர் விமான நிலையில் 10 கோடி பயணிகளை வருடம் முழுக்க சமாளிக்கும் திறன் கொண்டது. 2029ல் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2031ல் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடையும் இலக்குடன் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களையும் வகுத்து வருகிறது.

முக்கியமாக தொழிற்துறையில் மட்டும் 23 லட்சம் கோடியை முதலீடாக பெறும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. இது மொத்தம் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஐடி துறையை விட உற்பத்தி துறை தமிழ்நாட்டின் மாநில ஜிடிபியில் அதிக பங்களிப்பு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு தற்போது வாகனங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், தோல், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட இரசாயனங்கள், மின்னணுவியல், இயந்திரங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் உற்பத்தி துறையில் தமிழ்நாடுதான் முன்னிலை வகிக்கிறது.

Tamil Nadu has become the E Vehicle, Manufacturing, Factory and Fintech hub under DMK rule

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் இந்த வருடம் தமிழ்நாடு 8.40 சதவிகித பங்களிப்பை கொடுத்துள்ளது. ₹1.90 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை கண்காணிக்க, முதலீடுகளை ஊக்குவிக்க The Guidance Bureau என்ற பிரிவு அரசு மூலம்ம் இயக்கப்பட்டு வருகிறது. முதலீடுகளை கண்காணிக்க, ஊக்குவிக்க, அனுமதி அளிக்க, ஈர்க்க உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை பிரிவாக இந்த The Guidance Bureau செயல்பட்டு வருகிறது.

அதோடு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மதுரை ஐடி பார்க், தூத்துக்குடியில் அமைய உள்ள 1000 கோடி மதிப்பிலான சிப்காட் பார்க், 3500 கோடி ரூபாய் மதிப்பிலான துபாய் லூலு மால் குழுவின் முதலீடுகள், மணலூரில் அமையம் சிப்காட், கிருஷ்ணகிரியில் சூலகிரியில் அமைய உள்ள Future Mobility Park உள்ளிட்ட பல்வேறு 2022ல் தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடுகள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது. அதோடு தமிழ்நாட்டில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் மெட்டா வெர்ஸ், Web 3.0 மீது கவனம் செலுத்தி வருவதாகவும் CII-KPMG ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

இது தமிழ்நாடு 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பேங்கிங் துறையிலும் தமிழ்நாடு சாதனை செய்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தியன் வாங்கி 12 சதவிகித வருவாய் உயர்வையும், இந்தியன் ஓவர்சீஸ் வாங்கி 33.2 சதவிகித வருவாய் உயர்வையும் பதிவு செய்துள்ளது. இந்த பல்வேறு வருவாய்கள் காரணமாக 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+