ஐசியூவில் மருத்துவத்துறை.. கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர் பேச்சு.. கொந்தளித்த அதிமுக மாஜி அமைச்சர்
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் வலது கை அகற்றப்பட்ட குழந்தைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் -அஜிஷா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஒன்றரை வயதான இந்த குழந்தை உடல் நலம் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டான். சிகிச்சை பெற்று வந்த குழந்தையின் வலது கை அழுகிய நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், அந்தக் குழந்தையின் கை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டது. குழந்தையின் இந்த நிலைக்கு செவிலியர்களின் அலட்சியமே காரணம் என்று குழந்தையின் தாயார் கண்ணீர் மல்க கூறினார்.

இதையடுத்து, தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதா என்பதை விசாரிக்க குழு ஒன்றை அமைக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்ட குழு விசரணையை தொடங்கியுள்ளது. இதனிடையே, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார் ஆகியோர் வலது கை அகற்றப்பட்ட குழந்தைக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- தமிழக சுகாதாரத்துறை ஐசியூவில் இருக்கும் நிலை உள்ளது. இரவிலும் விழித்து இருக்க வேண்டிய துறைதான் சுகாதாரத்துறை. ஆனால் இப்போது பகலிலும் தூங்கக்கூடிய நிலையில் இந்த துறை உள்ளது. அமைச்சர் இந்த துறையை முழுமையாக கை கழுவி விட்டு இருக்கும் நிலை உள்ளது. மருத்துவத்துறை விழிப்புடன் இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்காது.

கை பாதிக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்களால் கண்டறிந்து இருக்க முடியும். முற்றிலும் இது தவிர்த்து இருக்கப்பட வேண்டிய நிகழ்வு. இது முற்றிலும் அரசின் குற்றம். இது துறையினுடைய குற்றம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குழந்தையையும் தாயையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசியிருக்கிறார். இது ஏற்புடையது அல்ல.. இந்த சம்பவத்திற்கு அதிமுக சார்பில் மிகக்கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

தொடர்ந்து ஜெயக்குமார் அளித்த பேட்டியில், குழந்தையின் எதிர்காலம் கருதி ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. வருமுன் காப்போம் என்பதை விட்டுவிட்டு சம்பவம் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்கிறார்களாம். தற்போது குழு அமைத்து இருக்கிறார்களாம். இந்தக் குழு அறிக்கை கொடுத்தால் குழந்தையின் கை கிடைத்து விடுமா? குழந்தையை பார்த்த பிறகு எங்களுக்கு கண்ணீரே வந்து விட்டது. மனதே சங்கடமாக இருக்கிறது. அந்த தாயின் வேதனை எப்படி இருக்கும்? தந்தையின் வேதனை எப்படி இருக்கும்? அதை புரிந்து கொள்ளாமல் தாயின் கருத்தை கூட விமர்சனம் செய்வது மிகவும் வேதனையும் வெட்கப்பட வேண்டிய விஷயம்" என்று ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications