பேபியின் தொப்புள் கொடியை வெட்டிய இர்பான்..அதிர்ந்த யூட்யூப்! ஆக்சன் கன்பாஃர்ம்..மருத்துவத்துறை அதிரடி
சென்னை: மருத்துவமனையில் பிறந்த தனது குழந்தையின் தொப்புள் கொடியை பிரபல யூட்யூபரான இர்பான் வெட்டிய வீடியோ வெளியாகி விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் வீடியோவை நீக்க கோரி யூட்யூப் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மருத்துவத் துறை கடிதம் எழுதியுள்ளதாகவும், மேலும், இர்பானிடம் விளக்கம் கேட்கப்பட்டு அதற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர் மருத்துவத்துறை அதிகாரிகள்.
தமிழகத்தின் மிகப் பிரபலமான யூட்யூபரான இர்பான் தனது இர்பான்ஸ் வியூ சேனலில் உணவு மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார். மேலும் தனது திருமணம், தனது வீட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இர்பான் துபாய் சென்றபோது தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவமனையில் சோதித்ததோடு, அதனையும் யூட்யூபில் அறிவித்தது பெரிய பேசு பொருளானது.
இதன் காரணமாக யூட்யூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது இதற்கிடையே தனது செயலுக்கு இர்பான் மன்னிப்பு கேட்டதை அடுத்து தமிழக மருத்துவத் துறையின் நடவடிக்கை கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இர்பான். கடந்த ஜூலை மாதம் அவரது மனைவிக்கு பிரசவம் ஆகியிருக்கிறது. தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்ற நிலையில் அங்கு இர்பானும் சென்று இருக்கிறார்.

இந்த நிலையில் அவரது யூடியூப் சேனலில் நேற்று ஒரு வீடியோ வெளியானது. அதில் கருவுற்ற தனது மனைவியுடன் இர்பான் பேசுவது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, அறுவை சிகிச்சைக்கு தயாராவது, பிரசவம் நடைபெற்றது என பல்வேறு காட்சிகள் இருந்தன. இந்த நிலையில் வீடியோவில் 11வது நிமிடத்தில் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் கத்தரிக்கோலால் வெட்டுவது போன்ற காட்சிகள் இருந்தது.
இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தது. அரசு பதிவு பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அரங்குக்குள் செல்ல வேண்டும். மேலும் கத்தரிக்கோல் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை மருத்துவர்கள் மட்டுமே கையாள வேண்டும். ஆனால் குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டியது சட்டப்படி தவறு என மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை பறந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் ராஜமூர்த்தி, குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை யூட்யூபில் இர்பான் வெளியிட்டு இருக்கும் நிலையில் இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் அதற்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும், மருத்துவமனையில் பிரசவத்தின் போது வீடியோ எடுக்கவும், தொப்புள் கொடியை கட் செய்யவும் பணியில் இருந்த மருத்துவர்கள் எப்படி அனுமதித்தினர் எனவும் அவர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இர்பான் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கு தமிழ்நாடு மருத்துவத்துறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications