சென்னை சாலையில் மயங்கிய ஊழியருக்காக தன் காரை கொடுத்துவிட்டு.. லிப்ட் கேட்ட மா சுப்பிரமணியன்
சென்னை: சென்னை சி.ஐ.டி. நகர் அருகே சாலையில் மயங்கி கிடந்த இளைஞரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சொந்த காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். பின்னர் 'லிப்ட்' கேட்டு மற்றொரு காரில் மதுரவாயலில் நடந்த கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு சென்றார்.
மா சுப்பிரமணியன் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். இவர் நேற்று சென்னை மதுரவாயலில் நடந்த கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் திநகர் பகுதியில் மேற்கு சி.ஐ.டி. நகர் அருகே மா சுப்பிரமணியன் காரில் சென்று கொண்டிருந்த போது, சிலர் அங்கு கூடிநின்று கொண்டிருந்தனர். அவர்கள் பதற்றத்துடன் இருப்பதை பார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது காரை நிறுத்தி இறங்கி என்னவென்று விசாரித்தார்.
அப்போது தனியார் உணவு வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்ததை தெரிவித்துள்ளார்கள்
இதையடுத்து சற்றும் யோசிக்காத அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது காரில் தனியார் உணவு வினியோகிக்கும் ஊழியரை ஏற்றி, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் மயக்கம் அடைந்த இளைஞருடன் அதே காரில் தனது பாதுகாப்பு அதிகாரியையும் அனுப்பி வைத்திருக்கிறார் மாசுப்பிரமணியன். அதன் பின்னர் அமைச்சர் மா சுப்பிரமணியன், அந்த வழியாக வந்த மற்றொரு காரில் 'லிப்ட்' கேட்டு மதுரவாயலில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர், கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு அங்கிருந்த டாக்டர்களிடம் அந்த இளைஞரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
அதற்கு பதில் அளித்த மருத்துவர்கள், உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அமைச்சர் மா சுப்பிரமணியன், மருத்துவர்களிடம் பேசும் போது, அந்த இளைஞரை தொடர்ந்து கண்காணித்து தேவையான சிகிச்சையை அளிக்க உத்தரவிட்டார். அமைச்சர் மா சுப்பிரமணியத்தின் இந்த மனிதநேயமிக்க செயலை பலரும் பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications