இந்திய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் டாப் 100-ல் கொடி கட்டிப் பறக்கும் தமிழகம்- முழு விவரம்!
சென்னை: இந்திய கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. மத்திய கல்வி நிறுவனங்கள், தமிழ்நாடு அரசு பல்கலைக் கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 100-ல் அதிகமாக இடம் பெற்றிருப்பது "கல்வி சிறந்த தமிழ்நாடு" என்பதை நிரூபிப்பதாகவும் அரை நூற்றாண்டுகால "திராவிட கட்சிகளின்" ஆட்சி எதை சாதித்தது என்பதற்கு விடையாகவும் இருக்கிறது என்கின்றனர் கல்வியாளர்கள்.
இந்தியக் கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2024 பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டார். 9-வது முறையாக இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய தரவரிசையின் 2024 பதிப்பில் நான்கு பிரிவுகள் தனித்துவமாக சேர்க்கப்பட்டுள்ளன. மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள், திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் மற்றும் திறன் பல்கலைக்கழகங்கள் ஆகிய மூன்று புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்துதல், திறந்தவெளி பல்கலைக்கழகங்கள், மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் திறன் பல்கலைக்கழகங்கள் ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலம், தற்போதுள்ள இந்திய தரவரிசை 16 பிரிவுகளாக அதிகரித்துள்ளது. அவை இந்திய தரவரிசை 2024-ல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
2016-ம் ஆண்டுக்கான, இந்திய தரவரிசைப் பட்டியலில், பொறியியல், மேலாண்மை மற்றும் மருந்தியல் ஆகிய மூன்று துறைகளுக்கான தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளில், ஏழு புதிய பிரிவுகள் மற்றும் ஐந்து புதிய பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள், திறந்தவெளி பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் பொறியியல், மேலாண்மை, மருந்தகம், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல், மருத்துவம், சட்டம், பல் மருத்துவம் மற்றும் வேளாண்மை மற்றும் அவை சார்ந்த துறைகள் ஆகிய 8 பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
தொடர்ந்து 6-வது ஆண்டாக ஒட்டுமொத்தப் பிரிவில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (மெட்ராஸ் ஐஐடி சென்னை ஐஐடி) முதலிடம் பிடித்தது. பொறியியல் பிரிவில் தொடர்ந்து 9-வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் டாப் 100 இடங்களைப் பெற்ற தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள் விவரம்:
- அனைத்து பிரிவுகளிலுமான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் மெட்ராஸ் ஐஐடி (சென்னை ஐஐடி) முதலிடத்தில் உள்ளது.
- அனைத்து பல்கலைக் கழகங்களில் தரவரிசைப்பட்டியலில் அமிர்தா விஸ்வ வித்யாபீதம் 7 வது இடம்; விஐடி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் 10 வது இடம் பெற்றுள்ளன.
- மாநில அரசின் பல்கலைக் கழகங்களில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 1-வது இடம்; கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி 7 -வது இடம்; சென்னை லயோலா கல்லூரி 8-வது இடம் பெற்றுள்ளன.
- ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் மெட்ராஸ் ஐஐடி 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பெற்றுள்ளது. திருச்சி என்ஐஐடி 9-வது இடம் பெற்றிருக்கிறது.
- மருந்தியல் (பார்மசி) கல்வி நிறுவனங்களில் ஊட்டி ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்வி நிறுவனம் 4-வது இடத்தைப் பெற்றுள்ளது.
- ஆர்க்கிடெக் கல்வி நிறுவனங்களில் திருச்சி என்ஐஐடி 8-வது இடம் பெற்றுள்ளது.
- மருத்துவக் கல்லூரிகளில் வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி 3-வது இடம் பெற்றுள்ளது.
- பல் மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் சென்னை சவீதா பல் மருத்துவ கல்லூரி 1-வது இடம் பெற்றுள்ளது.
- நாட்டின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் 18 பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.இதில் 6 மாநில அரசின் பல்கலைக் கழகங்கள், 10 தனியார் கல்வி நிறுவனங்கள், 2 மத்திய அரசின் கல்வி நிறுவனங்களாகும்.
- டாப் 100 இடங்களில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 20-வது இடம்; பாரதியார் பல்கலைக் கழகம் 44-வது இடம்; பாரதிதாசன் பல்கலைக் கழகம் 55-வது இடம், சென்னை பல்கலைக் கழகம் 64-வது இடம்; அழகப்பா பல்கலைக் கழகம் 76வது இடம்; பெரியார் பல்கலைக் கழகம் 100-வது இடம் பிடித்துள்ளன.
- தனியார் கல்வி நிறுவனங்களில் வேலூர் விஐடி, சென்னை சவீதா மருத்துவ கல்லூரி, சாஸ்த்ரா பல்கலைக் கழகம், எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம், சத்யபாமா கல்வி நிறுவனம், பாரத் கல்வி நிறுவனம், அமிர்த விஸ்வ வித்யபீடம், கலசலிங்கம் கல்வி நிறுவனம் ஆகியவை டாப் 100-ல் இடம் பிடித்தவையாகும்.
- மத்திய பல்கலைக் கழகங்களில் சென்னை ஐஐடி, திருச்சி என்ஐஐடி டாப் 100 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
- பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம் 13, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் 6, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம் 17-வது இடத்தைப் பெற்றன.
- ஊட்டி ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் நிறுவனம் ஆகியவையு தரவரிசைப் பட்டியலில் 6 மற்றும் 78-வது இடங்களைப் பெற்றுள்ளன.
- ஆர்க்கிடெக் கல்வி நிறுவனங்களில் திருச்சி என்ஐஐ, மதுரை தியாகராஜா கல்லூரி உள்ளிட்ட 6 கல்வி நிறுவனங்களில் டாப் 100-ல் இடம் பிடித்துள்ளன. இதில் 4 கல்வி நிறுவனங்கள் சென்னையில் உள்ளன.
- கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 3-வது இடத்தில் இருந்த சென்னை மாநில கல்லூரி தற்போது 13-வது இடத்துக்கு சென்றுவிட்டது. லயோலா கல்லூரி 8-வது இடம் பிடித்துள்ளது. பெண்கள் கல்வி நிறுவனங்களான ஸ்டெல்லா மேரீஸ், கிறிஸ்டியன் பெண்கள் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, மெட்ராஸ் சோசியல் ஒர்க் கல்லூரி ஆகியவையும் டாப் 100 இடத்தில் இடம் பெற்றுள்ளன.
- சென்னை மாநகரின் லயோலா, பிரசிடென்சி, கிறிஸ்டியன் கல்லூர், குருநானக் கல்லூரி ஆகியவையும் டாப் 100 கல்வி நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளன.












Click it and Unblock the Notifications