அரசு கார்களை உடனே திருப்பி அனுப்புங்க.. அதிகாரிகளுக்கு விஜய் போட்ட ஆர்டர்.. என்ன காரணம்?
சென்னை: தமிழக அரசுத் துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் அரசு வாகனங்களின் தேவையற்ற பயன்பாட்டை தடுக்க, தலைமைச் செயலகம் அதிரடி நடவடிக்கைகளைக் கையில் எடுத்துள்ளது. அரசின் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தவும், வாகனங்களை அதிகார வரம்பை மீறி வைத்திருப்பதைத் தடுக்கவும் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

15,000 வாகனங்கள்... தொடரும் முறைகேடுகள்
தமிழக அரசின் 41 துறைகளின் கீழ் தற்போது 15,000க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு பொதுத் துறை மூலமாக ஆடம்பர வாகனங்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
இருப்பினும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை மற்றும் ரகசிய விசாரணைகளில், பல மூத்த ஐஏஎஸ் மற்றும் துறை தலைமை அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களைத் தாண்டி, துறை சார்ந்த கூடுதல் வாகனங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. சில அதிகாரிகள் தங்களது அலுவலகம், சொந்த வீடு மற்றும் உதவியாளர்களின் பயன்பாட்டிற்காக ஒரே நேரத்தில் 4 வாகனங்கள் வரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லஞ்சப் பணம் பரிமாற்றம்
வெறும் நிர்வாக ரீதியிலான விதிமீறல்களோடு இது நிற்கவில்லை. அரசுக்கு சொந்தமான சொகுசு கார்கள் மற்றும் ஜீப்புகள் லஞ்சப் பணத்தைக் கைமாற்றுவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், எரிபொருள் படிகளிலும் மிகப்பெரிய அளவில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளன. ஓடாத வாகனங்கள், பழுது அடைந்து பணிமனையில் கிடக்கும் வாகனங்கள் மற்றும் பதிவேட்டில் மட்டுமே உள்ள வாகனங்களின் பெயரிலும் போலி கணக்கு காட்டப்பட்டு லட்சக்கணக்கில் அரசுப் பணம் சுருட்டப்பட்டுள்ளது.
அரசுக்குக் கடும் நிதிச்சுமை
தற்போது நிலவரப்படி, தமிழக அரசு தனது வாகனங்களுக்கு எரிபொருளுக்காக மட்டும் மாதந்தோறும் சுமார் ₹25 கோடி ரூபாயைச் செலவிட்டு வருகிறது. இந்தத் தடையற்ற முறைகேடுகள் மற்றும் போலி பில்களை முழுமையாகக் கட்டுப்படுத்தினால், அரசின் மாதாந்திரச் செலவில் கணிசமான தொகையைச் சேமிக்க முடியும் என்று நிதித் துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசின் அதிரடி உத்தரவு
இந்த முறைகேடுகளைத் தொடர்ந்து, அரசு வாகனப் பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உடனடி அரசாணையைப் பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுத் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரே ஒரு சொகுசு வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அலுவலகங்கள், வீடுகள் அல்லது உதவியாளர்களிடம் முடக்கி வைக்கப்பட்டுள்ள கூடுதல் துறைசார்ந்த வாகனங்களை உடனடியாகத் துறைத் தலைமை அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
இந்தக் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, சென்னை மாநகரின் பல்வேறு அரசு வளாகங்களில் அதிகாரிகள் தங்களது கூடுதல் வாகனங்களை வரிசையாக ஒப்படைக்கத் தொடங்கியுள்ளனர். சேப்பாக்கம், நந்தனம், சைதாப்பேட்டை, எம்.ஆர்.சி நகர், தரமணி மற்றும் கிண்டி ஆகிய முக்கிய அரசு அலுவலக வளாகங்களில் கூடுதல் வாகனங்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன.
பிற துறை அதிகாரிகளுக்கும் செக்!
இந்தக் கட்டுப்பாடு ஐஏஎஸ் அதிகாரிகளோடு மட்டும் முடிவடைந்துவிடவில்லை. ஐஏஎஸ் அல்லாத பிற துறை உயர் அதிகாரிகளும் தங்களின் கட்டுப்பாட்டில் எத்தனை அரசு வாகனங்கள் உள்ளன என்பது குறித்த முழுமையான அறிக்கையைஉடனடியாகத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய முக்கியத் துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை சொந்தப் பயன்பாட்டில் வைத்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications
