பசுமை படை ரெடி.. காலநிலை மாற்றத்திற்கு வெடி.. 40 இளைஞர்களைக் களத்தில் இறக்கிய ஸ்டாலின்
சென்னை : முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட 40 பசுமை தோழர்கள் முதல்வரைச் சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளனர்.
இந்த இந்த 40 பேர்? இவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

முதலில் பேச முன்வந்தார் அஜித், "இந்த முதலமைச்சர் பசுமை புத்தாய்வு திட்டத்திற்கு புரோகிராம் லீட் ஆக இருக்கிறேன். இந்த மாதிரியான ஒரு தனித்துவமான திட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவிலேயே இது ஒரு முன்மாதிரியான திட்டம். இதற்காக உழைத்து நல்ல ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்கிறார்
அடுத்து நினா, "முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெறுவதற்காகத் தலைமைச்செயலகம் சென்றோம். நாங்கள் ஒரு குழுவாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். நாங்கள் அனைவரும் மாவட்டம்வாரியாக சென்று தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டங்களை நடைமுறைப்படுத்த இருக்கிறோம்.

அதற்கான முழு முயற்சியோடு எப்படி ஈடுபட வேண்டும் என்பதைப் பலருக்கும் கற்றுத்தர இருக்கிறோம். எங்களால் இந்தப் பணியை முழுமையாகச் செய்ய முடியும் என்று நம்புகிறோம்" என்கிறார்
இவரைத் தொடர்ந்து ஸ்நொவி, "முதன்முறையாக இந்தியாவிலேயே இத்திட்டத்தைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதில் நாங்கள் 40 பேர் இணைந்துள்ளோம். இதில் பங்கேற்கும் அனைவரும் இளைஞர்கள். அது ஒரு சிறப்பான செய்தி.

காலநிலை மாற்றம் என்பது இன்றைக்கு நம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால். அதை எதிர்கொள்ள பல்வேறு இலக்குகளை நிர்ணயித்திருக்கிறோம். அதற்காகக் களத்தில் இறங்கி வேலை செய்ய இருக்கிறோம்.
இந்த 40 பேரும் 40 மாவட்டங்களில் பணியாற்ற இருக்கிறோம். காலநிலை மாற்றத்திற்கு எதிராக நமது தற்சார்பு தன்மையோடு எதிர்த்துப் போராடி தீர்வுகாண இருக்கிறோம். அதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் அரசு எங்களுக்குச் செய்து தர உள்ளது" என்கிறார்
தருண் குமார், "ஒரு மாவட்டத்திற்கு ஒரு நபர் என இப்போதைக்கு எங்களைப் பிரித்து அனுப்புகிறது அரசு. இயற்கை சார்ந்த அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதும், அவர்களின் மனநிலையில் நல்ல மாற்றத்தை உருவாக்குவதுமே எங்களது பணியாக இருக்கும்.

இது ஒரு நல்ல வாய்ப்பு. வரப்போகும் அடுத்த தலைமுறைக்கு நாங்கள் வழிகாட்டப் போகிறோம். அதனால் ஒரு மாற்றத்தைத் தமிழ்நாட்டில் உண்டாக்க இருக்கிறோம். ஒரு இளைஞராக எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு" என்கிறார்.
குளோரி, "தமிழ்நாடு அரசின் Green Fellowship Programme க்கு நான் தேர்வாகி இருக்கிறேன். உலகத்திற்கு முன்னால் மிகப் பெரிய பிரச்சினையாக கிளைமேட் சேஞ்ச் இன்றைக்கு உள்ளது. அந்த சவாலை எப்படி எதிர்கொள்வது என்பதற்காக முன்னோடியாக இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசுதான் முதன்முறையாக இத்திட்டத்திற்குச் செயல்வடிவம் கொடுத்திருக்கிறது.
காலநிலை மாற்றத்தை எப்படிச் சீர்படுத்துவது என்பதை நாங்கள் களத்தில் உள்ள மக்களுக்குப் புரியவைத்து மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்கிறார்

இது குறித்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, இ.ஆ.ப, "இந்தியாவைப் பொறுத்தவரை Green Fellowship Programme ஒரு முன்மாதிரியான திட்டம். இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 40 இளைஞர்களை நாங்கள் தேர்வு செய்துள்ளோம்.
இந்த 40 பேரும் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து மாவட்டம் வாரியாக களப்பணி செய்ய உள்ளனர். குறிப்பாக தலையாய பிரச்சினையாக இருக்கும் நெகிழிக் குப்பைகளுக்கு எதிராக இவர்கள் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளனர்.


தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை மாற்றாக முன்வைக்க உள்ளனர். அதற்காகப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். எப்படி காலநிலை மாற்றத்தைத் தடுப்பது? பசுமையை எப்படி அதிகரிக்கச் செய்வது?
இது 2 ஆண்டுகள் திட்டம். இதில் பங்கேற்று பணியாற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் இறுதியாக இதற்கான சான்றிதழை வழங்க உள்ளோம். இதை ஒரு டிப்ளமோ படிப்பைப் போல மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். நான் நிச்சயமாக நம்புகிறேன், இந்தத் தனித்துவமான திட்டம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும்" என்கிறார்.

இது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இணைந்து செயல்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமுள்ள 38 நபர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினோம்" என்று குறிப்பிட்டுள்ளார்

தடை, அதை இனி உடை!












Click it and Unblock the Notifications