ரூ.5 லட்சம் பரிசு.. ஒரு பதக்கம்! கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்’ பெற விண்ணப்பங்களுக்கு அழைப்பு!
சென்னை: தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு குடியரசு தினத்தன்று கோட்டை அமீர் பெயரில் 'கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' வழங்கப்பட்டு வருகிறது. 5 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் ஒரு பதக்கத்துடன் இந்த விருது வழங்கப்படும் நிலையில் 2026 குடியரசு தின விழாவையொட்டி இந்த விருதுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு குடியரசு தினத்தன்றும் தமிழகத்தில் பல்வேறு பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
குறிப்பாக சமூக நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர்களுக்கு கோவையை சேர்ந்த கோட்டை அமீர் பெயரில் 'கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்' வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோட்டை அமீர் பதக்கம் வழங்கப்படும் நிலையில் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதில்," மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. கோட்டை அமீர் அவர்களின் பெயரால் "கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்" ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்)க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.
மத நல்லிணக்கத்திற்காக சேவை செய்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். இப்பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. வரும் 26.01.2026 அன்று குடியரசு தின விழாவின்போது வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவரைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் (Applications) மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 அவர்களுக்கு 15.12.2025-க்கு முன்பாக அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர். இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 26.01.2026 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவார்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications