தவெக ஆட்சியை கவிழ்க்க மதுரையில் ரகசிய டீல்? டிசம்பர் 14-ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்? டெல்லி பிளான்
சென்னை: தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் அமைந்த தமிழக வெற்றிக் கழகம் அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள நிலையில், ஆட்சிக்குத் தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அரசியல் சதுரங்க வேட்டைகள் பின்னணியில் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக, தென்மாவட்டமான மதுரையில் பிரதான திராவிடக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பாஜகவின் முக்கியத் தலைவர் இடையே ரகசியப் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

"தவெகவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து.. ஆளுநர் மூலம் தவெக அரசை உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடச் செய்து, இந்த ஆட்சியைக் கவிழ்க்க எங்களுக்கு உதவுங்கள். அதற்குப் பதிலாக, டெல்லி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் அனைத்து மசோதாக்களுக்கும் நாங்கள் நிபந்தனையின்றி முழு ஆதரவு தருகிறோம்" என்று அந்த ரகசிய சந்திப்பில் பேர ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டிசம்பர் 14-ல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்?
சட்டமன்ற விதிகளின்படி, புதிதாக அமைந்த ஒரு அரசுக்கு எதிராக முதல் ஆறு மாதங்களுக்கு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாது. தவெக அரசு இந்த ஆறு மாத காலக் கெடுவைக் கடந்துவிட்ட நிலையில், அடுத்தகட்டமாகச் சட்டப்பேரவையில் பலப்பரீட்சை நடத்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன.
வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள 'குரு பெயர்ச்சி' முடிந்த பிறகு, இந்த ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டத்தை முழு மூச்சாகக் களம் இறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் இரண்டு முக்கிய பிரதான திராவிடக் கட்சிகளும் கைகோர்த்து, டிசம்பர் 13-ஆம் தேதிக்குப் பிறகு தவெக அரசுக்கு எதிராக ஒருமித்த குரலில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருவதாக ஒரு மூத்த அமைச்சரே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, டிசம்பர் 14-ஆம் தேதியன்றே சட்டப்பேரவையில் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.
எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயற்சி
அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் பட்சத்தில், சட்டமன்ற வாக்கெடுப்பில் ஆளுங்கட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைக் குறைக்க தீவிரக் 'குதிரை பேரம்' பின்னணியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தொடக்கம் முதல் 'விஜய் மக்கள் இயக்கம்' மூலம் களத்தில் நிற்காமல், தேர்தல் நேரத்தில் வெளியிலிருந்து வந்து தவெக சின்னத்தில் நின்று வென்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து கோடிக்கணக்கான பணம் மற்றும் எதிர்காலப் பதவிகள் பேசி வலை வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை முன்கூட்டியே மோப்பம் பிடித்த தவெக தலைமை, உடனடியாகத் தலையிட்டு அந்தப் பேரங்களை முறியடித்ததோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்சிகளின் வலையில் விழுந்துவிடாமல் பாதுகாக்க தீவிரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஈசிஆர் நட்சத்திர விடுதிக்கு மாற்றப்படும் எம்.எல்.ஏ.க்கள்
குதிரை பேரத்தைத் தடுக்கும் அவசர நடவடிக்கையாக, சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் அனைத்து தவெக எம்.எல்.ஏ.க்களையும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதிக்கு பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தலைமை திட்டமிட்டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் மற்றும் கட்சிப் பாதுகாப்பு வளையத்தில் அவர்கள் தங்கவைக்கப்படவுள்ளனர்.
முதல்வர் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வு
ஒருபுறம் பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் மற்றும் குடிநீர் கேட்ட வாக்காளரைத் துணை சபாநாயகர் தாக்கிய சர்ச்சை என சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணை.. மறுபுறம் திராவிடக் கட்சிகள்-பாஜக கூட்டுப் பின்னணியில் வரவிருக்கும் டிசம்பர் 14 நம்பிக்கை இல்லாத் தீர்மான மிரட்டல் என தவெக அரசு முன்னெப்போதும் இல்லாத அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு நிற்கிறது. இந்தச் சவால்களை முறியடித்து ஆட்சியைத் தக்கவைக்க முதல்வர் விஜய் என்ன அதிரடி முடிவுகளை எடுக்கப்போகிறார் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்றுநோக்கி வருகிறது.




Click it and Unblock the Notifications
