தமிழகத்தில் புதிய கலாசாரம்.. பட்ஜெட்டுக்கும் இலச்சினை-பிரசாரத்துக்கும் இலச்சினை.. அதகள திமுக, அதிமுக
சென்னை: தமிழ்நாட்டில் புதிய கலாசாராமக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் “இலச்சினைகளை” அறிமுகப்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த 19-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் அது தொடர்பான முன்னோட்டம், அறிவிப்புகள் இடம் பெறாது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்; பட்ஜெட் உரை வாசித்த பின்னர் நிதித்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து புள்ளி விவரங்களை தெரிவிப்பார். இதுதான் வழக்கமான நடைமுறை.

ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு இந்த முறை பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக முதலில் இலச்சினை ஒன்றை வெளியிட்டது. அந்த இலச்சினையில் ”2024-25 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என்ற முழக்கம் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 'மாபெரும் 7 தமிழ்கனவு’ என்ற பெயரில் பட்ஜெட்டில் இடம் பெற இருக்கும் முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டன. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 தலைப்புகளில் பட்ஜெட் அம்சங்கள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டு வரலாற்றில் பட்ஜெட்டுக்கு இலச்சினை, முன்னோட்டம் ஆகியவை முதல் முறையாக வெளியிடப்பட்டது திமுக ஆட்சியில்தான்.
தற்போது திமுகவுக்கு போட்டியாக அதிமுக, தேர்தல் பிரசாரத்துக்கும் இலச்சினை வெளியிட்டுள்ளது. சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கான இலச்சினை வெளியிடப்பட்டது. “தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்” என்ற முழக்கத்துடன் இந்த இலச்சினையை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக AI மூலமாக ஜெயலலிதா பேசுகிற வீடியோ பதிவும் ஒன்றையும் அதிமுக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசியல் மேடைகள் காலந்தோறும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. தற்போது இலச்சினை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என அத்தனை அப்டேட்டுகளுடன் அரசியல் கட்சிகள் களம் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
