அலர்ட்.. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் விளையாடினால் இதுதான் தண்டனை! வெளியான முழுவிபரம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டம் தடை தொடர்பான சட்ட மசோதா 2வது முறையாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இது விரைவில் சட்டமாக உள்ளது. இந்த சட்டம் இயற்றப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்கள், அந்த விளையாட்டை வழங்கும் நிறுவனங்கள், விளம்பரம் செய்யும் நபர்களுக்கு சிறை தண்டனையோடு, அபராதமும் விதிக்கப்படும். இந்த தண்டனை, அபராதம் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பலர் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டு லட்சக்கணக்கான ரூபாயை இழந்து தற்கொலை செய்தனர். இதையடுத்து இதனை தடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்தார்.
அதன்பிறகு நிரந்தர சட்டத்துக்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 19ல் சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 28 ல் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சில சந்தேகங்களை ஆளுநர் ஆர்என் ரவி கேட்டார். அதன்பிறகு 131 நாட்கள் கழித்து கடந்த மார்ச் 6ம் தேதி அந்த மசோதாவை அவர் திருப்பி அனுப்பினார்.
இதனால் ஆளுநர் ஆர்என் ரவிக்கு திமுக உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதையடுத்து இந்த தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் நிறவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 2வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக விரைவில் சட்டம் இயற்றப்பட உள்ளது.
இந்நிலையில் தான் இந்த சட்ட மசோதாவானது ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்கள், வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விளம்பரம் செய்வோருக்கு அபராதம், சிறை தண்டனை வழங்க பரிந்துரை செய்கிறது. அதன்படி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடினால் 3 மாதம் வரை சிறை அல்லது ரூ.5000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. இல்லாவிட்டால் சிறை தண்டனையுடன் ரூ.5000 அபராதம் சேர்ந்தே வழங்கப்படும்.
அதேபோல் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஓராண்டு வரை சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும். மேலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட சேவைகளை வழங்கினால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்பட உள்ளது.
மேலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களில் ஏற்கனவே தண்டனை பெற்றவர்கள் அடுத்தடுத்து தண்டனை பெறும்போது ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்குள் சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் ஆன்லைன் சூதாட்டம் வழங்கும் நிறுவனம், விளம்பரங்களில் ஈடுபட்டு தவறிழைப்போருக்கும் இரட்டிப்பு தண்டனை வழங்க பரிந்துரைத்துள்ளது.
மேலும் சட்ட மசோதாவின் படி ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தனி ஆணையம் அமைக்கப்பட உள்ளது. இதில் ஓய்வு பெற்ற அரசு தலைமை செயலாளர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, மனநல நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் இடம்பெற உள்ளனர். இந்த குழு சிவில் நீதிமன்றம் போன்று செயல்பட்டு ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்கும் செயல்பாட்டில் ஈடுபட இந்த மசோதா வழிவகுத்து கொடுக்கிறது.
********












Click it and Unblock the Notifications