லாரிகளில் மாயமான அரிசி, பருப்பு! சிக்கித் தவிக்கும் ரேசன் ஊழியர்கள்! தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை
சென்னை: ரேஷன் கடைகளில் விற்பனையின் போது முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ப்ளூடூத் முறையில் தற்போது பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன் கடைகளுக்குக் குடோன்களில் இருந்து பொருட்களைச் சப்ளை செய்யும் போதும் ப்ளூடூத் முறையிலேயே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி இருக்கின்றனர் ரேஷன் கடை ஊழியர்கள். அதாவது போக்குவரத்தின் போது அரிசி, பருப்பு மூடைகளில் எடை குறைவு ஏற்படும் நிலையில், இது ஊழியர்களின் கணக்கில் சேர்க்கப்படுவதால், அதனை போக்க இம்முறையை அமல்படுத்த வேண்டும் என்கின்றனர்.
தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாகக் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படுகின்றன.

ரேஷன் கடைகள்
ஒரு பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்குக் குறைவாக உள்ள பகுதிகளில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9388 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கு மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளில் முழு நேரமாக 4,352 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.
முறைகேடுகள்
இந்த ரேஷன் கடைகளில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் பணியாளர்களும் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்டவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கும் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ப்ளூடூத் முறையில் தற்போது பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதாவது எடை போடும்போது அதனுடன் இணைக்கப்பட்ட ப்ளூடூத் இணைப்பு மூலம் எடை சரியாக இருந்தால் தான் பொருட்களை வழங்க முடியும்.
ப்ளூடூத் வழங்கல்
இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்கள் கூறி வருகின்றனர். அதாவது பல நேரங்களில் இணைப்பு குறைபாடு மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முறையாக பொதுமக்களுக்குப் பொருட்களை வழங்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் லாரிகளில் இருந்து ரேஷன் கடைகளுக்குப் பொருட்களை இறக்கும்போது எடைகளில் மாறுபாடு ஏற்படுகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முறைகேடு தடுப்பு
இதனைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு ப்ளூடூத் முறையில் பொருட்கள் வழங்கப்படுவது போல ரேஷன் கடைகளுக்கும் ப்ளூடூத் முறையிலேயே அதாவது பருப்பு, அரிசி உள்ளிட்டவற்றை இறக்கும்போது சரியாக எடை இருக்கிறதா என்று சோதனை செய்த பிறகு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதனால் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க முடியும் எனவும் கூறுகின்றனர் பணியாளர்கள். இதுதொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அதனைப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை ரேஷன் கடை ஊழியர்களிடையே எழுந்துள்ளது. மேலும் இதுதொடர்பாகப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாகவும் ஊழியர்கள் கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications