"டிட்வா புயலால் பேரழிவை சந்தித்துள்ள இலங்கை மக்களுக்கு துணைநிற்க தமிழ்நாடு தயார்”: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: "டிட்வா புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு மத்திய அரசின் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது" என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட கடும் மழை வெள்ளம் அந்நாட்டு மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. நவம்பர் 17 ஆம்தேதி முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். கனமழையால், நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை எதிரொலியாக, பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 153 பேர் பலியாகி உள்ளனர். 200 பேரை காணவில்லை. கனமழை காரணமாக 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து விட்டன. 1.08 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 2.19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கை மக்களுக்கு உதவிட அண்டை நாடான இந்தியா முன்வந்துள்ளது. இலங்கையில் இயற்கைப் பேரிடரை முன்னிட்டு, இந்தியா சார்பில் ஆபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன் கீழ், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்தியா வழங்குகிறது.
ஐ.என்.எஸ் விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி கப்பல்கள் மூலம் கொழும்பு நகரில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய விமான படையின் சி-130 ஜே விமானத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில், கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு பொருட்கள் உள்ளிட்ட 12 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயார் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டிட்வா புயலால் இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ள நிலையில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பொழிவைச் சந்தித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தும் பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியும் இலங்கை மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இப்பெருந்துயரில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பங்கெடுக்கிறோம்.
இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று காலை 11.05 மணியளவில் முதற்கட்டமாக 177 பேர் (ஆண்கள் 113, பெண்கள் 60, குழந்தைகள் 4) தமிழ்நாட்டுக்குத் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர்.
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் மூலம் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தந்து, அவர்கள் மீண்டெழுந்திட உதவிக்கரம் நீட்டிடத் தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழுவை அமைத்திடத் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications