மாணவர்களுக்கு குட்நியூஸ்.. தமிழகத்தில் ரத்தாகப்போகும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு? காரணம் இதுதான்!
சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் இருந்து 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை தொடர்ந்து ஆலோசித்து வரும் நிலையில் விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. முதலில் 10, 12ம் வகுப்புக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடந்தன. அதன்பிறகு 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தும் முறை அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வந்ததன் பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று இருந்தது.

அதாவது 11ம் வகுப்பு தேர்வுக்கு ஆசிரியர்கள் யாரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. குறிப்பாக தனியார் பள்ளிகள் 11ம் வகுப்பு தேர்வு நடத்தாமல் 12ம் வகுப்புக்கான பாடத்தை முன்கூட்டியே படிக்க வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதன் காரணமாக தான் 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தும் முறை அமலுக்கு வந்தது.
தற்போது கடந்த 5 ஆண்டுகளாக 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியிலும் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
அதாவது 10, 11, 12ம் வகுப்பு என தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வை சந்திக்கின்றனர். இது அவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இதுபற்றி பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்ய தொடங்கியது.
இந்த பரிசீலனையின்போது தேர்வு நடத்தும் போது ஆயிரக்காண ஆசிரியர்களை தேர்வு பணிக்கு பயன்படுத்த வேண்டி இருப்பதும், பல கோடி ரூபாய் செலவாவதும் தெரியவந்தது. மேலும் 11ம் வகுப்பில் பொதுத்தேர்வில் ஏராளமானவர்கள் தோல்வியடைவதும் நடந்து வருகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதும் தெரியவந்தது.

இதுதவிர சமீபத்தில் மாநில கல்வி கொள்கை உருவாக்க குழு கூட்டத்தில் மாநில பள்ளி கல்வி முன்னாள் ஆணையர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுத்துறை சார்பிலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாம் என மாநல அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற கல்வி திட்டங்களில் 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லாதது பற்றியும் தேர்வுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் தான் வரும் கல்வியாண்டான 2023,-2024ல் 11ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோடை விடுமுறைக்கு பிறகு நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இதுபற்றிய முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications