தமிழகம் அதிர்ந்த டாஸ்மாக் மதுபான முறைகேடு:சென்னையில் 3 நாட்கள் நீடித்த அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார். இந்த துறையில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்பட்டு வந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் உள்ள மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனையில் ரூ1 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கடந்த 2023-ம் ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகாரும் தந்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் மதுபான கொள்முதல், விற்பனை தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனம் உட்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது; தற்போது ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மதுபான கொள்முதல், விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை களமிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. இந்த சோதனையில் பெருமளவு பணம் மற்றும் ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகிக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் மதுபானம் கொள்முதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நள்ளிரவுக்கும் பின்னும் தொடர்ந்தது. டாஸ்மாக் அலுவலகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications